கோவையில் பிரம்மாண்டமாக தயாராகிவரும் தேசபக்தி கோட்டை.. ஆகஸ்டில் திறக்க ஏற்பாடு
இளைஞர்களிடம் தேசபக்தியை விதைக்கும் முயற்சியாக கோவையில் தேசபக்தி கோட்டை பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. ஆகஸ்ட் மாதத்தில் இது திறக்கப்படவுள்ளது.
ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டிருந்த இந்திய நாட்டை மீட்பதற்காக பல சுதந்திர போராட்ட வீரர்கள் சொல்லில் அடங்கா தியாகங்களை செய்துள்ளனர். இவர்களின் தியாகத்தையும் வீரத்தையும் தேச பக்தியையும் நினைவு கூறுவது நம் கடமை.
இதற்காக சுதந்திர தின விழா, குடியரசு தின விழா உள்ளிட்ட தினங்களில் மத்திய மாநில அரசுகளின் சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் நினைவு கூறப்படுகின்றனர்.
இதன் மூலம் இளைய தலைமுறையினரிடம் தேச பற்று விதைக்கப்படுகிறது. அதே சூழலில் கோவையில் தேச விடுதலைக்காக போராடியவர்களையும் நினைவு கூறும் விதமாகவும், இளைய தலைமுறையினரிடம் தேசபக்தியை விதைக்கும் விதமாகவும் ஜெய்ஹிந்த் அறக்கட்டளை கடந்த 2014ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. நிரந்தரமாக சுதந்திர அடையாளத்தை பேணிக்காக்கும் விதத்தில் கோவை – பாலக்காடு சாலையில் உள்ள க.க.சாவடியில், 8.5 ஏக்கர் பரப்பளவு உள்ள நிலத்தில் 1.5 ஏக்கரில் ‘தேசபக்திக்கோட்டை’ என்ற பிரமாண்டமான கோட்டையை இந்த அறக்கட்டளை கட்டி வருகிறது.
.இங்கு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள 175 சுதந்திரப் போராட்ட வீரர்களின் புகைப்படங்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கை குறிப்புகள் நிரந்தரமாக வைக்கப்பட உள்ளது. இது நிரந்தரமான கண்காட்சி மையமாகவும் அமைய உள்ளது. இந்தக் கோட்டை நுழைவாயில் முன்பு 75 அடி உயரமுள்ள கம்பத்தில் 24 அடி நீளமும், 14 அடி உயரமும் கொண்ட தேசிய கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.
மேலும் ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குள் வந்தது முதல் அவர்கள் விடுதலைக்குப் பின்பு வெளியே சென்றது வரையான நிகழ்வுகள், ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்வு உள்ளிட்டவைகளும் தத்ரூபமாக காட்சிப்படுத்தபட உள்ளது என ஜெய் ஹிந்த் அமைப்பின் தலைவர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, மாணவர்களும் இளைய சமுதாயத்தினரும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களையும், தேச உணர்வையும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த தேசபக்தி கோட்டையை அமைத்துள்ளோம். இது வரை 2.5 கோடி ரூபாய் இந்த கோட்டைக்காக செலவு செய்துள்ளோம். ஆகஸ்ட் மாதத்தில் திறப்பு விழா நடைபெற உள்ளது என்றார்.
இன்றைய நவீன காலத்தில் இளைஞர்கள் பல்வேறு சூழல்களில் திசை திரும்பும் நிலையில் சுதந்திரம், சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகம் ஆகியவற்றை பறை சாற்ற வேண்டியது அனைவரின் கடமையாகும்.அப்படிப்பட்ட பெரும்பணியில் ஜெய்ஹிந்த் அறக்கட்டளையினர் செயல்படுவது அனைவர் மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது.