அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ரஷியா மீதான பொருளாதார தடைக்கு சீனா எதிர்ப்பு.
உக்ரைனில் படையெடுத்து உள்ளதால் ரஷியா மீது அமெரிக்கா, கனடா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து உள்ளன. அத்துடன் பெரும்பாலான சர்வதேச நிதி பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தப்படும் கட்டண முறையான ‘ஸ்விப்ட்’ அமைப்பில் இருந்தும் சில ரஷிய வங்கிகள் நீக்கப்பட்டு உள்ளன.
இந்த பொருளாதார தடைகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை ரஷியா ஏற்கனவே கண்டித்து உள்ளது. இதன் தொடர்ச்சியாக சீனாவும் இந்த பொருளாதார தடை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பொருளாதார தடைகளை பயன்படுத்துவதை சீனா எதிர்க்கிறது. அதுவும் சர்வதேச சட்டங்களுக்கு எதிராக ஒருதலைபட்சமாக இத்தகைய தடைகளை கடுமையாக எதிர்க்கிறது’ என்று தெரிவித்தார்.