யுக்ரேனின் அணு ஆயுதம் வாங்கும் முயற்சியை அனுமதிக்க மாட்டோம் – ஐ.நா அமர்வில் ரஷ்யா.
அணு ஆயுதங்களை வாங்கும் யுக்ரேனின் முயற்சியை அனுமதிக்க மாட்டோம் – ரஷ்ய வெளியுறவுத்துறை
அணு ஆயுதங்களை வாங்க யுக்ரேன் முயற்சித்து வருவதாகவும் அதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றும் கூறியிருக்கிறார் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கோ லாவ்ரோஃப்.
யுக்ரேனின் செயல்பாடு மிகப்பெரிய அச்சுறுத்தல் மற்றும் அது நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
“யுக்ரேனில் இன்னும் சோவியத் அணுசக்தி தொழில்நுட்பம் உள்ளது. எனவே இந்த அச்சுறுத்தலுக்கு ரஷ்யாவே வெற்றிகரமாக பதிலளிக்க வேண்டும், என லார்வோஃப் கூறியுள்ளதாக அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.
ஐ.நா பொதுச்சபை அமர்வில் பதிவு செய்யப்பட்ட செர்கே லாவ்ரோஃபின் உரை ஒளிபரப்பப்பட்டது. அதில் “முன்னாள் சோவியத் யூனியனின் நாடுகளில் மேற்கத்திய நாடுகள் ராணுவ தளங்களை கட்டக்கூடாது,” என அவர் எச்சரித்தார்.
அணு ஆயுதங்களை வாங்கும் யுக்ரேனின் முயற்சியை ரஷ்யா தடுத்து நிறுத்தும் என்றும் லாவ்ரோஃப் கூறினார். எனினும், அதே அமர்வில் இடம்பெற்ற யுக்ரேன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரி குலேபா, யுக்ரேனில் கண்மூடித்தனமாக ரஷ்யா தாக்குதல்களை நடத்தி போர்க்குற்றம் இழைப்பதாக குற்றம்சாட்டினார்.
ரஷ்யாவின் இந்த ஆக்கிரமிப்பு அணுகுமுறையையும் படுகொலை ஆயுதங்களைப் பயன்படுத்துவதையும் நிறுத்த சிறப்பு அமர்வைக் கூட்டி விவாதிக்க வேண்டும் என்றும் டிமிட்ரி குலேபா வலியுறுத்தினார்.
“யுக்ரேனில் குடியிருப்பு கட்டடங்கள், மழலையர் பள்ளிகள், ஆதரவற்றோர் காப்பகங்கள், மருத்துவமனைகள், அவசரகால வாகனங்கள், பயணிகள் பேருந்துகள் மற்றும் நாட்டை விட்டு வெளியேறும் மக்கள் என எல்லோரையும் இலக்கு வைத்து ஏவுகணை தாக்குதல் நடத்துவதில் எந்த நியாயமும் இல்லை,” என்று குலேபா கூறினார்.