உள்ளாட்சி பதவிகள் விவகாரம்- கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் கே.என்.நேரு, எ.வ.வேலு பேச்சுவார்த்தை
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க கூட்டணி கட்சிகளுக்கு பதவி வழங்குவது குறித்த பேச்சுவார்த்தை இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அமைச்சர் கே.என்.நேரு இல்லத்தில் நடைபெற்றது.
காங்கிரஸ் கமிட்டி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யுனிஸ்ட், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சிகளும் இந்த பேச்சுவார்த்தையில் தங்களுக்கு வேண்டிய இடங்கள் குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை நிறைவுற்றதை அடுத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ‘விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் எங்களுக்கு சில பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதற்கான ஒப்பந்தத்தை கையெழுத்து இட்டுள்ளோம். தி.மு.கவின் கோட்பாடுகளுக்கு இணங்க நாங்கள் கேட்ட இடங்கள் கிடைக்க பெற்றுள்ளன. எனவே முதல்வர் தலைமையில் அறிவிப்புகள் வெளியாகும்’ என்று தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், ‘தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பாக எங்கள் தலைமையின் கூட்டணியில், எங்களுக்கு கொடுத்த இடங்களில் 95 சதவிகிதம் வெற்றி பெற்றுள்ளோம். முதல்கட்டமாக இரண்டு பதவிகள் தருகிறோம். முதல்வரிடம் ஆலோசனை செய்த பின் எந்த பதவி என அழைத்து கூறுவதாக, தலைமை குழுவில் இருந்த அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு தலைமையிலான குழு தெரிவித்து இருந்தனர்.
கடலூர் துணை மேயர் இரண்டு நகர் மன்றத்திற்கான பதவிகளை முதல்வரிடம் கேட்டுள்ளேன். கேட்ட இடங்கள் கிடைக்காமல் இருந்தாலும் வருத்தம் கொள்ள மாட்டோம். வெற்றி பெற்ற பல்வேறு இடங்களின் பட்டியலை கொடுத்திருக்கிறேன், கண்டிப்பாக அவர் எங்களுக்கான பதவிகளை தருவார் என நம்புகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.