எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விஷேட பொலிஸ் பாதுகாப்பு.
நாடளாவிய ரீதியில் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அருகே, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஏற்பட்டிருக்கும் நீண்ட வாகன வரிசையை மையப்படுத்தி இடம்பெறலாம் என சந்தேகிக்கப்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை கையாள பொலிஸ் மா அதிபர் விஷேட உத்தரவொன்றினை பிறப்பித்துள்ளார்.
மகாணங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், வலயங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள், பணிப்பாளர்கள், உதவி பொலிஸ் அத்தியட்சர்கள் மற்றும் அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளையும் விழித்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றின் அருகே எந்த விதமான அசம்பாவிதங்களும் நடக்கக் கூடாது எனவும், அவ்வாறு அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க உரிய, அவசியமான பாதுகாப்பு முறைமை ஒன்றினை கையாள வேண்டும் எனவும் பொலிஸ் மா அதிபர் அனைத்து பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கும் கட்டளியிட்டுள்ளார்.
அத்துடன் விவசாயம் சார் நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படும் இயந்திரங்களுக்காக எரிபொருளினை கேன்களில் பெற்றுக்கொள்ள வரும் மக்களுக்கு தடையின்றி அதனைப் பெற்றுக்கொள்ள முடியுமான சூழலை பொலிஸார் ஏற்படுத்த வேண்டும் எனவும், சுற்றுலா பயணிகளை ஏற்றிய வாகனங்கள், அம்பியூலன்ஸ் வண்டிகள், நோயாளர்களை ஏற்றிய வாகனங்கள் போன்றவற்றுக்கு முன்னுரிமை வழங்கி எரிபொருளினை வழங்கும் வகையில் வழியமைத்துக்கொடுக்க வேண்டும் எனவும் பொலிஸ் மா அதிபரின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் எரிபொருள் நிலையம் ஒன்றின் அருகே எரிபொருளினைப் பெற்றுக்கொள்ள வாகனங்கள் நீண்ட வரிசையில் இருக்கும் போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலை நிலைமை சீராகும் வரை பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொண்டு கையாள வெண்டும் எனவும் பொலிஸ் மா அதிபரால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு தேவையான அலோசனைகள், மேற்பார்வைகளை வழங்குவது மாகாணங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், வலயங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள், பணிப்பாளர்கள், உதவி பொலிஸ் அத்தியட்சர்களின் பொறுப்பு எனவும் பொலிஸ் மா அதிபரின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.