நியூஸ்பேப்பரில் தேர்தல் விளம்பரம் வெளியிட்ட திமுக, பாஜகவுக்கு எதிராக வழக்கு.. ₹10 ஆயிரம் அபராதம் விதித்த நீதிமன்றம்
நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதியுடன் நிறைவடைவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதை மீறி, திமுக மற்றும் பாஜக சார்பில், வாக்கு சேகரிக்கும் வகையில், தேர்தல் நாளான பிப்ரவரி 19ஆம் தேதி பத்திரிகைகளில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டதாக கூறி, தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் வழக்கறிஞர் ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவை மேற்கோள்காட்டி தாக்கல் செய்யப்பட்ட அந்த மனுவில், தேர்தல் ஆணைய அறிவிப்புக்கு முரணாக செயல்பட்ட திமுக மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளின் கவுன்சிலர்களை தகுதி நீக்கம் செய்ய மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும், அவர்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ்களை திரும்பப் பெற உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், உள்ளாட்சி தேர்தலுக்கு பொருந்தாது எனவும், தமிழ்நாடு நகராட்சி சட்டம் என தனி சட்டம் உள்ளதாகவும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திலும் பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட தடை விதிக்கவில்லை எனவும் குறிப்பிட்டது.
மேலும், மாநில தேர்தல் ஆணைய அறிவிப்பில், பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட எந்த தடையும் விதிக்கப்படவில்லை எனவும், தொலைக்காட்சி, வானொலி, சமூக வலைதளங்களில் வெளியிட தான் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறிய நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும், எந்த தகுதியும் இல்லை எனவும் தெரிவித்து தள்ளுபடி செய்தனர்.
மேலும், நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் வகையில் வழக்கு தொடர்ந்ததற்காக 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதிகள், அதை 15 நாட்களில் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணையத்துக்கு செலுத்த உத்தரவிட்டனர்.