யாழ். பல்கலைக்கழகத்தின் பொதுப்பட்டமளிப்பு விழா.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பொதுப்பட்டமளிப்பு விழாவின்போது ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு வழங்கப்படும் யாழ். பல்கலைக்கழக ஊடக மாணவனும் ஊடகவியலாளருமான ‘அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம்’ இந்த வருடம் அமரர் செல்வி நவரத்னம் தில்காந்திக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.
மொனராகலை, மரகலை தோட்டம் என்னும் கிராமத்தைச் சேர்ந்த அமரர் செல்வி நவரத்னம் தில்காந்தி யாழ். பல்கலைக்கழக ஊடக கற்கைகள் துறையில் கல்விகற்று ஊடகவியலில் சிறப்புச் சித்தி பெற்று யாழ். பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்தபோது அண்மையில் நோயுற்ற நிலையில் இயற்கை எய்தியிருந்தார்.
அவருக்குச் சமர்ப்பணம் செய்யும் வகையில் யாழ். பல்கலைக்கழக ஊடக மாணவனும் ஊடகவியலாளருமான ‘அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம்’ அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
யாழ். பல்கலைக்கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி பட்டமளிப்பு விழா நாளை முதல் மூன்று நாட்கள் இடம்பெறவுள்ளன.
‘அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம்’ யாழ். பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின்போது கடந்த நான்கு ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகின்றது.
யாழ். பல்கலைக்கழகத்தில் ஊடக மாணவனாகப் படித்துக்கொண்டு ஊடகவியலாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த நிலக்சன் 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி அதிகாலை 5 மணியளவில் அவரது வீட்டில் வைத்து பெற்றோர் முன்னிலையில் ஆயுததாரிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
அவரது ஞாபகார்த்தமாக அவருடன் யாழ். இந்துக்கல்லூரியில் ஒன்றாகக் கற்ற 2004ஆம் ஆண்டு உயர்தர மாணவர்களால் முன்னெடுக்கப்படும் ‘நிலா நிதியம்’ யாழ். பல்கலைக்கழகத்தின் பொதுப் பட்டமளிப்பு விழாவின்போது ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் தங்கப் பதக்கத்தை அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்தமாக வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.
இதன்மூலம் அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் நான்காவது வருடமாக தற்போது வழங்கப்படவுள்ளது. 2019ஆம் ஆண்டு முதலாவது தங்கப் பதக்கத்தை செல்வி அன்ட்கேசிகா லோறன்ஸ் ராஜ்குமாரும், 2020ஆம் ஆண்டு தினேஸ் விஜயதர்சினியும், 2021ஆம் ஆண்டு செல்வி முனியப்பன் துலாபரணியும் பெற்றுக்கொண்டனர்.