சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டான்’ வெளியீட்டுத் திகதி அறிவிப்பு.

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டான்’ படம் மே 12-ம் தேதி ரிலீஸாக வாய்ப்புள்ளது. இப்படம் வெளியீட்டுத் திட்டம் குறித்து மேலும் சில தகவல்கள் வெளிவந்துள்ளன.
சிவகார்த்திகேயன், சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, ப்ரியங்கா அருள் மோகன், சூரி, முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டான்’. லைகா நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தினை அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ளார். இவர் இயக்குநர் அட்லியிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர்.
இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து, மார்ச் 25-ம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்தது படக்குழு. ஆனால் அன்றைய தினத்தில் ‘ஆர்.ஆர்.ஆர்’ படமும் வெளியாகும் என்று விளம்பரப்படுத்தியது படக்குழு. ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை லைகா நிறுவனம் தான் கைப்பற்றியுள்ளது. இதனால் அதே தேதியில் ‘டான்’ வெளியீடு சாத்தியமில்லை என்பது உறுதியானது.
இதனைத் தொடர்ந்து ‘டான்’ படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி குறித்து ஆலோசித்து வந்தது படக்குழு. இறுதியாக மே 12-ம் தேதி வெளியிடலாம் என்று முடிவு செய்துள்ளது லைகா நிறுவனம்.
மேலும், ‘டான்’ வெளியீட்டுக்காக உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்துடன் கைகோத்துள்ளது லைகா நிறுவனம். ஆகையால் பெரியளவில் திரையரங்குகள் ஒப்பந்தம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.