“தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்க நடவடிக்கை எடுக்கவும். ஜனாதிபதி பணிப்புரை….
தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, பொறுப்புவாய்ந்த அனைத்துத் தரப்பினருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் பணிப்புரை விடுத்தார்.
நிலவுகின்ற மின்வெட்டு மற்றும் எரிபொருள் நெருக்கடி தொடர்பில் இன்று (02) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அவர்கள் இந்தப் பணிப்புரையை விடுத்தார்.
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சுகளின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற நீண்ட கலந்துரையாடலின் பின்னர், தாமதமின்றி எரிபொருளை இறக்குமதி செய்தல், கையிருப்பை தொடர்ச்சியாகப் பேணல் மற்றும் மின் உற்பத்திக்கான எரிபொருள் மற்றும் நிலக்கரியை தொடர்ச்சியாக வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.
இந்நிலையில், மார்ச் 05ஆம் திகதி முதல் மின்வெட்டு இடம்பெறாது என அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
நாடளாவிய ரீதியில் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும், நாளை (03) முதல் எரிபொருள் விநியோகம் வழமை போன்று இடம்பெறும். எனவே, பொதுமக்கள் அச்சமடைந்து எரிபொருள் சேமித்து வைப்பதைத் தவிர்க்குமாறும், பொதுமக்களிடம் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர்.