பஸிலைப் பகிரங்கமாக விளாசித்தள்ளிய விமல்! – கொழும்பு அரசியலில் மீண்டும் கொதிநிலை.
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச மீது, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான அமைச்சர் விமல் வீரவன்ச சரமாரியாகச் சொற்கணைகளைத் தொடுத்துள்ளார். இதனால் கொழும்பு அரசியலில் மீண்டும் கொதிநிலை ஏற்பட்டுள்ளது.
அரச பங்காளிக்கட்சிகளின் முக்கிய கூட்டமொன்று நெரூர் (02) கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது நாட்டை மீட்டெடுப்பதற்கான யோசனைகளும் முன்வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, நிதி அமைச்சர் பஸிலை, அமைச்சர் விமல் விளாசித்தள்ளியுள்ளார்.
“எனக்கு மூளை உள்ளது, எனவே, நிபுணர்களின் ஆலோசனை தேவையில்லை எனக்கூறி, ஆணவப்போக்கில் செயற்படுபவர்களால் சவால்களை எதிர்கொள்ள முடியாது. நெருக்கடி நிலைமைகளை சுட்டிக்காட்டி, ஒன்பது கடிதங்களை அனுப்பினார் எனவும், ஆனால் எதற்கும் பதில் வரவில்லை எனவும் மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிடுகின்றார். நிதி அமைச்சரை சந்திக்க நேரம் வழங்கப்படவில்லை.
நாடு கடும் அந்நிய செலாவணி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் மத்திய வங்கி ஆளுநருக்கு நிதி அமைச்சரை சந்திக்க முடியவில்லையெனில், பிறகு நிலைமையை விளக்கவா வேண்டும்? இனிமேலும் எம்மால் மௌனம் காக்க முடியாது. அதனால்தான் உண்மையை வெளிப்படுத்துகின்றோம்” என்றும் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.