அமெரிக்கா உடனான விண்வெளி உறவை துண்டித்து கொள்வதாக ரஷியா பகிரங்க அறிவிப்பு!
உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 8-வது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில், அமெரிக்கா மீதான கடுமையான நிலைப்பாட்டை ரஷியா எடுக்க தொடங்கியிருக்கிறது. அதன் ஒரு நடவடிக்கையாக, சர்வதேச விண்வெளி நிலைய பணிகளில் அமெரிக்காவுடனான அனைத்து உறவுகளையும் துண்டித்து கொள்வதாக ரஷியா அறிவித்துள்ளது.
அமெரிக்காவுக்கான ராக்கெட் என்ஜின் வழங்குவதையும் நிறுத்தி கொள்வதாக ரஷியா அறிவித்துள்ளது.
சர்வதேச விண்வெளி நிலைய பணிகளில் ஜப்பான், கனடா, அமெரிக்கா, ரஷியா மற்றும் ஐரோப்பா இணைந்துள்ளன. அங்கு உலக விண்வெளி வீரர்கள் மற்றும் விஞ்ஞானிகள் குழு இணைந்து பல்வேறு ஆய்வுப்பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
பல்வேறு ஆய்வுகளை இந்த விண்வெளி நிலையம் நடத்தி வரும் சூழலில் அந்த ஒத்துழைப்பை ரஷியா முழுமையாக துண்டித்து கொள்வதாக அறிவித்துள்ளது.இது ஒரு மிகப்பெரிய அறிவிப்பாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் பெரும்பாலான தொழில்நுட்பங்கள் ரஷியாவின் பங்களிப்பு ஆகும்.
பல கோடி டாலர்கள் மதிப்பிலான ஆய்வுப்பணிகள் நடைபெற்று வரும் சூழலில் ரஷியாவின் இந்த அறிவிப்பு உலக அளவில் விண்வெளி ஆராய்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், அணு ஆயுத போர் என்பது தங்கள் கையில் இல்லை என்றும் அது முழுக்க முழுக்க நேட்டோ படைகள் மற்றும் மேற்கத்திய நாடுகள் கைகளில் தான் இருக்கிறது.எனவே அணு ஆயுத பயன்பாடு என்பது தங்கள் நிலைப்பாடு இல்லை என்று ரஷிய தரப்பு விளக்கியுள்ளது.
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா மீது உலக நாடுகள் பல தொடர்ந்து பொருளாதார தடை நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், ரஷியாவும் உலக நாடுகளுக்கு பதிலடி தரும் விதமாக இந்த நடவடிக்கைகளை எடுக்க தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.