உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்களை மீட்க குழுவை அமைத்தது தமிழக அரசு
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழக மாணவர்களை பாதுகாப்பாக மீட்டு வர, திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி உள்ளிட்ட எம்பி-க்களை கொண்ட குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது.
ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தவர்களை மீட்டு வருவது தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது, உக்ரைன் மேற்குப் பகுதியில் அதிகளவில் உள்ள தமிழக மாணவர்களை, ரஷ்ய எல்லை வழியாக அழைத்து வர வெளியுறவு அமைச்சகத்தை தொடர்பு கொண்டு துரித நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு வலியுறுத்தப்பட்டது.
அதேவேளையில், உக்ரைன் அண்டை நாடுகளான ஹங்கேரி, ருமேனியா, போலந்து மற்றும் ஸ்லோவாகியா ஆகிய நாடுகளில் தற்காலிகமாக தங்கியுள்ள மாணவர்களை சிறப்பு விமானம் மூலம் விரைந்து அழைத்து வர ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் கோரப்பட்டது.
இதற்காக, அந்நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி, எம்.எம்.அப்துல்லா அடங்கிய 8 பேர் குழுவை, தமிழக அரசு அமைத்துள்ளது.
இந்த குழுவில் 4 ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் திமுக எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜாவும் இடம் பிடித்துள்ளனனர்.
சிறப்புக் குழுவினர் விரைவில் உக்ரைன் அண்டை நாடுகளுக்கு சென்று தமிழக மாணவர்களை மீட்கும் பணிகளை துரிதப்படுத்துவர்.
இதனிடையே, மீட்பு பணிகளை ஒன்றிணைந்து மேற்கொள்ள, தமிழக அரசு கேட்டுகொண்டதற்கு இணங்க, மத்திய தொலைத்தொடர்பு அமைச்சக செயலாளர் ராஜாராமனை, ஒருங்கிணைப்பு அலுவலராக மத்திய அரசு நியமித்துள்ளது.