வானிலை வரலாற்றில் இதுதான் முதல் முறை… தமிழகத்தை நெருங்குகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்
தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு சுமார் 13 கிமீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, இலங்கைக்கு கிழக்கே சுமார் 190 கி.மீ., தெலைவிலும், நாகப்பட்டினத்திலிருந்து கிழக்கு-தென்கிழக்கே 430 கி.மீ., புதுச்சேரிக்கு தென்கிழக்கே 520 கிமீ தூரத்திலும் நிலவி வருகிறது.
இது அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் இலங்கையின் கிழக்குக் கரையோரமாக வட தமிழகக் கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
கடலோரப் பகுதிகளில் மழை:
இந்நிலையில், நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட கடலோர கிராமங்களான அக்கரைப்பேட்டை, வேளாங்கண்ணி, காமேஸ்வரம், விழுந்தமாவடி, கரியாப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இதேபோல, நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட சிக்கல், கீழ்வேளூர், தேவூர், திருக்குவளை உள்ளிட்ட பகுதிகளில் கருமேகங்கள் சூழ்ந்து காணப்படுகிறது. தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
வானிலை வரலாற்றில் முதல் முறை:
இந்நிலையில், வானிலை வரலாற்றில் முதல் முறையாக மார்ச் முதல் வாரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி தமிழக பகுதிகளை நெருங்குவதாக தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மையத்தில் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், மார்ச் 4 (இன்று) கடலோர தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்கள் [தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை] புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.
மேலும், 5ஆம் தேதி (நாளை) கடலோர தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
6ஆம் தேதி (ஞாயிற்று கிழமை) கடலோர மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
7ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதி, வடதமிழக மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளில் 4ஆம் தேதி (இன்று) சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
5ஆம் தேதி மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், வடதமிழக மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடை இடையே மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
6ஆம் தேதி வடதமிழக மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்றும், ஆழ்கடல் பகுதிகளில் உள்ள மீனவர்கள் உடனே கரை திரும்புமாறு அறிவுறுத்தினார். மேலும் தமிழகத்தில் அதி கனமழைக கான வாய்ப்பு இல்லை என்றும் வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.
மார்ச் மாதத்தில் மழை குறித்த கேள்விக்கு பதிலளித்த பாலச்சந்திரன், கடந்த 130 வருடங்கள் 5 புயல்களும் 2 காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் வங்க கடலில் உருவாகி உள்ளது. 1938 ல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கையும், 1994 ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் அந்தமானையும் நெருங்கியது, இது வரை இருக்கக்கூடிய வானிலை வரலாற்றின் அடிப்படையில் தமிழகத்தை நெருங்கும் முதல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இதுதான் என்று தெரிவித்தார்.