தேனியில் காங்கிரஸுக்கு அதிர்ச்சி அளித்த திமுக கவுன்சிலர்கள்.. காங்கிரஸ் நகராட்சித் தலைவர் வேட்பாளர் வெளிநடப்பு..
காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தேனி – அல்லிநகரம் நகர்மன்ற தலைவர் தேர்தலில் திமுக வேட்பாளர் மனு தாக்கல் செய்ததால் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தேனி – அல்லிநகரம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க 19 வார்டிலும், அ.தி.மு.க – 7 வார்டிலும், காங்கிரஸ் -2, அ.ம.மு.க -2, பா.ஜ.க – 1, மற்றும் சுயேட்சை 2வார்டிலும் வெற்றி பெற்றுள்ளனர். தேனி – அல்லிநகரம் நகராட்சி தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு தேனி – அல்லிநகரம் நகர் மன்ற தலைவர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் அக்கட்சி சார்பாக 22வது வார்டு கவுன்சிலர் சற்குணம் என்பவர் நிறுத்தப்பட்டார்.
இந்நிலையில் தற்போது நடைபெற்ற நகர்மன்ற தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் 10வது வார்டில் வெற்றி பெற்ற திமுக கவுன்சிலர் ரேணுப்பிரியா மனு தாக்கல் செய்தார்.
இதனால் நகர்மன்ற தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் போட்டியிட இருந்த காங்கிரஸ் கவுன்சிலர் சற்குணம் தேர்தலை புறக்கணித்து வெளியே வந்தார். இதில் திமுக கவுன்சிலர்கள் – 19பேர், காங்கிரஸ் – 2 பேர், அமமுக – 2 பேர், சுயேட்சை -2பேர், அதிமுக – 1, பாஜக – 1 என 27கவுன்சிலர்கள் வருகை தந்துள்ளனர்.