இந்தியா வெறும் சந்தையல்ல; உற்பத்திக்கான வாய்ப்புள்ள நாடு
இந்தியா போன்ற ஒரு நாடு, பொருள்களை விற்கும் வெறும் சந்தையாக முடிந்து விடுவதை ஏற்க முடியாது. சர்வதேசமும் இந்தியாவை ஓர் உற்பத்தி சக்தியாகக் கருதுகிறது. உற்பத்திக்கான ஏராளமான வாய்ப்புகள் உள்ள நிலையில், அதிக அளவு பொருள்களை உற்பத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை உருவாக்க முழு பலத்துடன் பணியாற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார்.
மத்திய வர்த்தகத் தொழில் துறையின், தொழில் ஊக்குவிப்பு உள்நாட்டு வர்த்தகப் பிரிவு (டிபிஐஐடி) ஏற்பாடு செய்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய 8-ஆவது மெய்நிகர் வழி கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை உரையாற்றினார். “உலகத்துக்காக இந்தியாவில் உற்பத்தி’ என்கிற மையக் கருத்தில் இந்தக் கருத்தரங்கு நடைபெற்றது.
இதில் பிரதமர் மோடி பேசியதாவது: நிதிநிலை அறிக்கையில் தற்சார்பு இந்தியா, இந்தியாவில் உற்பத்தி போன்ற முக்கிய அம்சங்களுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது. இந்தியா போன்ற நாடு வெறும் சந்தையாக மாறுவது ஏற்புடையது அல்ல. கரோனா நோய்த்தொற்றுக் காலத்தில் உதிரிபாகங்கள் உற்பத்தி துறையில் (சப்ளை செயின்) தடங்கல்களும், நிச்சயமற்ற தன்மைகளும் ஏற்பட்டதை நாம் மறக்க முடியாது. இந்தியாவில் உற்பத்தி என்பதன் முழு செயல்பாட்டையும், முக்கியத்துவத்தையும் நமக்கு இந்த அனுபவம் எடுத்துக்காட்டியது. மற்றொரு பக்கம் நமக்கு சில சாதகமான அம்சங்களும் உள்ளன. மக்கள்தொகையில் திறன் வாய்ந்த இளைஞர்களின் பங்கு, ஜனநாயகக் கட்டமைப்பு, இயற்கை வளங்கள் போன்ற சாதகங்களோடு இந்தியாவில் உற்பத்தி என்ற நோக்கத்துக்கு உறுதியுடன் செல்ல ஊக்கப்படுத்த வேண்டும்.
இவை எல்லாவற்றையும் விட, தேசப் பாதுகாப்பு என்ற வகையில் நாம் பார்த்தால், “தற்சார்பு இந்தியா’ என்பது அனைத்தையும்விட மிக முக்கியமானது.
தற்போது சர்வதேசமும் பொருள் உற்பத்தித் துறையில் ஆற்றல் மிக்க நாடாக இந்தியாவைக் காண்கிறது. அதேசமயம், நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) பொருள்கள் உற்பத்தி 15 சதவீதமாக உள்ளது. இருப்பினும் நாட்டில் உற்பத்திக்கு எல்லையற்ற சாத்தியக்கூறுகள் உள்ளன. இந்தியாவில் வலுவான பொருள்கள் உற்பத்தி தளத்தை உருவாக்க முழு பலத்துடன் செயல்பட வேண்டும். வெளிநாட்டு ஆதாரங்களை சார்ந்திருக்கும் நிலையை அகற்றிவிட்டு, புதிய வாய்ப்புகளாக, உதாரணமாக செமிகண்டக்டர்கள், மின்சார வாகனங்கள் போன்ற தயாரிப்புகள், எஃகு, மருத்துவச் சாதனங்கள் போன்ற உள்நாட்டு உற்பத்திகளில் கவனம் செலுத்துவது அவசியம்.
இந்தியாவில் உற்பத்தி செய்த பொருள்களுக்கும், மற்ற (வெளிநாடுகள்) நாடுகளின் உற்பத்திப் பொருள்களுக்கும் இடையேயான வேறுபாட்டை சந்தைகளில் வெளிப்படுத்த வேண்டும். இந்தியாவின் பல்வேறு விழாக்களுக்கு வழங்கப்படும் பொருள்களில் வெளிநாட்டுப் பொருள்கள் அதிகமாக இருப்பது திகைப்பை ஏற்படுத்துகிறது. இவற்றை உள்ளூர் தயாரிப்புகள் மூலம் எளிதாகக் கிடைக்கச் செய்ய முடியும். உள்ளூர் பொருள்களுக்கு ஆதரவு மற்றும் தற்சார்புக்கு ஊக்கமளிக்க உள்ளூர் பொருள்களை சந்தைப்படுத்துதல், பிராண்டிங் செய்தல் முயற்சிகளில் தனியார் துறையினர் ஈடுபட வேண்டும். உங்கள் நிறுவனம் உற்பத்தி செய்யும் பொருள்கள் மீது பெருமிதம் கொள்ளுங்கள். அதேபோல இந்தப் பெருமித உணர்வை உங்கள் இந்திய வாடிக்கையாளர்களிடம் நிலை நிறுத்த வேண்டும்.
மேலும், உள்ளூர் பொருள்களுக்கான புதிய வாய்ப்புகளைக் கண்டறிவது அவசியம். இந்திய உற்பத்திப் பொருள்களில் பன்முகத்தன்மையை உருவாக்கி மேம்படுத்துவதோடு உலகத் தரத்தை பராமரிக்க வேண்டும். 2023-ஆம் ஆண்டு சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறு தானியங்களுக்கான தேவை உலகில் அதிகரித்துள்ளது. உலக அளவில் சந்தைகளை ஆய்வு செய்வதன் மூலம், அதிகபட்ச உற்பத்தி, பேக்கேஜிங் செய்வதற்கு நமது ஆலைகளை நவீனமயமாக்க நாம் தயாராக வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் பிரதமர் மோடி.