அவப்பெயருடனும் அழிவுடனும் முடிவுக்கு வரும் கோட்டா அரசு! – அடித்துக் கூறுகின்றது சு.க.
அவப்பெயருடனும் அழிவுடனும் கோட்டாபய அரசு நிறைவுக்கு வரும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
கடந்த புதன்கிழமை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையில் ஆளுந்தரப்பின் 11 பிரதான பங்காளி கட்சிகள் இணைந்து ‘முழு நாடும் சரியான பாதை’க்கு என்ற தொனிப்பொருளில் தேசிய கொள்கைத் திட்டமொன்றை வெளியிட்டிருந்தன.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில மிகவும் காரசாரமாக உரையாற்றியிருந்ததோடு நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவின் தீர்மானங்களையும் கடுமையாக விமர்சித்திருந்தனர்.
இந்நிலையிலேயே, அரசில் அங்கத்துவம் வகித்துக் கொண்டு கூட்டுப் பொறுப்பை மீறும் வகையில் செயற்பட்டனர் எனக் கூறி இவ்விருவரும் ஜனாதிபதியால் பதவி நீக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹண லக்ஸ்மன் பியதாஸ ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போது கூறியதாவது:-
“ஆளுந்தரப்பின் 11 பங்காளிக் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எவரையும் தனிமைப்படுத்திவிடக் கூடாது என்று கட்சித் தலைவர் மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார்
ஆளுந்தரப்பின் கூட்டணியிலுள்ள அனைத்துக் கட்சிகளையும் அழைத்து கலந்தாலோசிப்பதை விடுத்து, இவ்வாறு அமைச்சர்களைப் பதவி நீக்கியுள்ளமையானது தலை வலிக்கு தலைணையை மாற்றும் செயற்பாடாகும்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை வெற்றிபெறச் செய்வதற்கு இவர்கள் இருவரும் பாடுபட்ட தலைவர்களாவர். அமைச்சரவையிலிருந்து இவர்களை வெளியேற்றுவதற்கு எடுத்த தீர்மானம் கவலைக்குரியதாகும். இந்தத் தீர்மானத்துக்குக் கடும் கண்டனத்தை வெளியிடுகின்றோம்.
1970ஆம் ஆண்டு அரசு பாரிய வீழ்ச்சியடைந்தமையை நினைவுபடுத்துகின்றோம். கட்சியின் உள்ளக முரண்பாடுகளால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டது. அதன் பின்னர் அப்போதைய அரசு பாரிய தோல்வியடைந்ததோடு அவப்பெயரையும் பெற்றுக் கொண்டது.
இந்தக் கோட்டாபய அரசும் அவ்வாறான அவப்பெயருடனும் அழிவுடனுமே நிறைவுக்கு வரும். இவ்வாறான தீர்மானங்களால் ஒருபோதும் நாட்டில் தற்போதுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது” – என்றார்.