“சீனாவின் வளர்ச்சியை போட்டியாக கருத வேண்டாம்” – அமெரிக்காவுக்கு சீனா வலியுறுத்தல்.
பல்வேறு விவகாரங்களில் சீனா-அமெரிக்கா இடையே மோதல் போக்கு நீடிக்கிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் இருநாடுகளின் உறவு மோசமடைந்துள்ளது. இந்த நிலையில் சீனாவின் வளர்ச்சியை போட்டியாக கருத வேண்டாம் என அமெரிக்காவை சீனா வலியுறுத்தி உள்ளது. இது குறித்து சீன நாடாளுமன்றத்தின் செய்தி தொடர்பாளர் ஜாங் யேசுய் கூறியதாவது…..
“சீனாவின் வளர்ச்சியை ஒரு சாக்காகப் பயன்படுத்துவதும், சீனாவை ஒரு போட்டியாளராக கொள்வதும் இரு நாடுகளுக்கு இடையேயான பரஸ்பர நம்பிக்கையையும் ஒத்துழைப்பையும் சிதைத்து, இறுதியில் அமெரிக்காவின் சொந்த நலன்களைப் பாதிக்கும்.
சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நிலையான உறவுகள் இரு தரப்பினரின் வளர்ச்சிக்கும் நல்லது, மேலும் சர்வதேச அமைதியைப் பேணுவதற்கும், காலநிலை மாற்றம், கொரோனா தொற்றுநோய் மற்றும் பிற உலகளாவிய சவால்களுக்கு திறம்பட பதிலளிப்பதற்கும் உகந்தது. சீனா பிரச்சினையைத் தூண்ட முயலவில்லை. அதே சமயம் எந்த பிரச்சினை வந்தாலும் சீனா பயந்து போகாது.”