28,300 மெட்ரிக் தொன் எரிபொருளுடன் கப்பலொன்று வருகை – வலு சக்தி அமைச்சு.
நாட்டில் தொடர்ந்தும் பெற்றோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுக்கின்ற நிலையில், நேற்றைய தினம் 28,300 மெட்ரிக் தொன் எரிபொருளுடன் கப்பலொன்று நாட்டுக்கு வருகை தந்துள்ளது.
குறித்த எரிபொருள் கப்பலில் 9,000 மெட்ரிக் தொன் விமானங்களுக்கு உபயோகிகும் எரிபொருளும் உள்ளடங்குவதாக வலு சக்தி அமைச்சின் மேலதிக செயலாளர் சாமிந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
எவ்வாறிருப்பினும் இந்த கப்பலிலுள்ள எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கான கடன் சான்று பத்திரங்களை விடுவித்துக் கொள்வதற்கு 40 மில்லியன் டொலர் தேவைப்படுவதாகவும், அதனை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த செவ்வாயன்று 37,000 மெட்ரிக் தொன் எரிபொருளுடன் வந்த கப்பலுக்கான டொலர் செலுத்தப்பட்டுள்ள நிலையில், அதன் ஊடாக பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள எரிபொருளை பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வலு சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய தற்போது எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு அருகில் காணப்படும் வரிசை படிப்படியாக குறைவடையும் என்று எதிர்பார்ப்பதாகவும் மேலதிக செயலாளர் சாமிந்த ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.