அரச வங்கிகளுக்கு ஜனாதிபதி அதிரடி பணிப்புரை…
நெல் கையிருப்பை பிணையாக வைத்து, நெல்லைக் கொள்வனவு செய்வதற்காக, நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு கடன் வசதிகளை வழங்குமாறு இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ பணிப்புரை விடுத்தார். போட்டித் தன்மையுடன் நெல்லைக் கொள்வனவு செய்து, அரசாங்கத்திடம் போதியளவு நெல் கையிருப்பைப் பேணுவதை இலக்காகக் கொண்டு, இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார்.
கொழும்பு 02, சேர் சித்தம்பலம் ஏ. கார்டினர் மாவத்தையில் அமைந்துள்ள நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைமை அலுவலகத்தை நேற்று (04) முற்பகல் பார்வையிட்ட போதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். பெரும் போகத்தில் நெல்லைக் கொள்வனவு செய்தல், களஞ்சியப்படுத்தல், விற்பனை மற்றும் தட்டுப்பாடின்றி சந்தையில் நிலவுகின்ற அரிசிக்கான தேவையை தொடர்ந்து பேணுவதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகளை ஆராய்வதே ஜனாதிபதி அவர்களின் இந்த திடீர் விஜயத்தின் நோக்கமாகும்.
1971ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க பாராளுமன்றச் சட்டத்தின் மூலம் ஸ்தாபிக்கப்பட்ட நெல் சந்தைப்படுத்தல் சபையின் நோக்கு, “நெல் மற்றும் அரிசி கொள்வனவு, களஞ்சியப்படுத்தல், பதப்படுத்துதல் மற்றும் விற்பனை ஆகியவற்றில் முன்னணி அரச இடைத்தரகராகச் செயற்படுதல்” போன்றவையாகும். நெல் விவசாயிக்கு இடைத்தரகர்கள் இன்றி நியாயமான விலையை பெற்றுக்கொடுத்தல் மற்றும் சந்தையில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் போது நெல் கையிருப்புக்களை வழங்குவதும், நெல் சந்தைப்படுத்தல் சபையின் முதன்மையான பணிகளாகும்.
கடந்த அரசாங்கத்தில் 2017 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் ஒரு நெல்லைக்கூட கொள்வனவு செய்யப்படாததாலும், பயன்படுத்தக்கூடிய நெல் கையிருப்புக்களை கால்நடை தீவனமாகக் கருதி தனியார்த்துறை வியாபாரிகள் ஒரு சிலருக்கு மிகக் குறைந்த விலைக்கு வழங்கியதாலும் நிறுவனத்திற்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நெல்லுக்கு நியாயமான விலை கிடைக்காமை, இடைத்தரகர்களுக்கு கமிஷன் வழங்குவது, நெல் கொள்வனவுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள், களஞ்சியசாலைகளை உரிய முறையில் பராமரிக்காமை போன்ற காரணங்களால் விவசாயிக்கும் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கும் இடையிலான உறவு தூரமாக்கப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டுக்கு ஐந்து வருடங்களுக்கு முன்னர் நிலவிய 35 ரூபாவிற்கும் குறைவாக இருந்த கட்டுப்பாட்டு விலையை 2020ஆம் ஆண்டு பெரும் போகத்தில் குறைந்தபட்சம் 55 ரூபாவாக கொண்டு வருவதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. 2022ஆம் ஆண்டு பெரும் போகத்தில், ஒரு கிலோ நெல்லின் விலை 95 ரூபாவாக உயர்வடைந்துள்ளதால், அதிகமாக நெல்லைக் கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்த முடிந்ததாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் உப தவிசாளர் துமிந்த பிரியதர்ஷன அவர்கள் தெரிவித்தார்.
நெல் சந்தைப்படுத்தல் சபையானது 315,000 மெற்றிக் தொன் கையிருப்பை பேணுவதற்குரிய இயலுமையைக் கொண்டுள்ளது. அதனை 04 இலட்சம் வரை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்தார். கடந்த இரண்டு வருடங்களில் இலங்கை இராணுவத்தினரின் உதவியுடன் 315 களஞ்சியசாலைகள் புனரமைக்கப்பட்டன. எஞ்சிய 35 களஞ்சியசாலைகளும் விரைவில் புனரமைக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
நெல் கொள்வனவை துரிதப்படுத்துவதற்காக 40 பட்டதாரிகள் உதவிப் பிரதேச முகாமையாளர்களாகவும், 200 பல்நோக்கு உத்தியோகத்தர்களை களஞ்சிய நடவடிக்கைகளுக்காகவும் உடனடியாக நியமிக்க தீர்மானிக்கப்பட்டது. நெற் களஞ்சியசாலைகளை பாதுகாக்க யானை வேலிகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.
நெல் சந்தைப்படுத்தல் சபையை இலாபம் ஈட்டும் நிறுவனமாக கட்டியெழுப்புவதோடு, எவ்வித முறைகேடுகளுக்கும் இடமளிக்க வேண்டாம் என்றும் ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார். கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.