“ரீ குடிக்க நான் வரவில்லை; அபிவிருத்தியை துரிதப்படுத்தவே ஒருங்கிணைப்புக் குழுவில் நான்”….
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகளைத் துரிதப்படுத்தவே யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் நான் பிரதமரின் நேரடிப் பணிப்பின் பேரில் நியமிக்கப்பட்டிருக்கின்றேனே தவிர ரீயும், வடையும் சாப்பிட்டுச் செல்வதற்கல்ல என்று தெரிவித்தார் யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப் குழுவில் பிரதமரின் இணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள காசிலிங்கம் கீதநாத்.
யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவரான அங்கஜன் இராமநாதன் முன்வைத்த கருத்துக்கள் தொடர்பில் ஊடகங்கள் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எனக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகார வரம் என்பது பிரதமரூடாக நேராக அணுக வேண்டிய பிரச்சினைகளுக்குத் துரிதமான தீர்வைப் பெற்றுக்கொடுப்பதாகும். மாவட்டத்தின் அபிவிருத்திகளைத் துரிதப்படுத்தும் முகமாக பிரதமரின் நேரடிப் பணிப்பின் கீழேயே இந்தப் பதவி எனக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இதன் பலாபலன்களை வெகுவிரைவில் அனைவரும் உணர்ந்துகொள்வார்கள். எமது பணி செயலில் காட்டுவதேயன்றி வாய்வீச்சில் காட்டுவதல்ல.
பிரதமரின் பெயரையோ பிரதமர் அலுவலகத்தின் பெயரையோ ஒருபோதும் நான் துஷ்பிரயோகப்படுத்துவதில்லை. பிரதமரின் தூரநோக்குத் திட்டங்களைச் செயலுருப்பெறச் செய்வதும் எமது அரசின் கொள்கைத் திட்டங்களை மக்கள் மயப்படுத்துவதுமே எமது தலையாய கடமையாகும்.
இதற்கு அரசியல் சாயம் பூசநினைப்பது அவரவரின் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியேயன்றி வேறெதுவும் இல்லை. எனக்கு அரசியலுக்கு வரவேண்டிய எந்தவிதமான அவசியமுமோ – விருப்பமோ அறவே இல்லை. அப்படியே அரசியலுக்கு வந்தாலும் நான் ‘தவளை அரசியல்’ செய்யமாட்டேன்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும், எக்காரணங்களுக்காகவும் அமைச்சர் நாமல் ராஜபக்ச என்னைப் பணி நீக்கவில்லை. என்னுடைய பதிவுத்திருமணம், திருமணம் உட்பட அனைத்து சுப நிகழ்வுகளிலும் முதலில் வந்து தனது வாழ்த்துகளையும் ஆசியையும் வழங்குபவர் அமைச்சர் நாமல் ராஜபக்சதான். ஆகையினால் இதுவரை எமக்குள் எந்தவித கசப்புணர்வும் ஏற்பட்டதில்லை என்பதைப் பொறுப்புணர்வுடன் கூறிக்கொள்கிறேன்.
அர்த்தமற்ற , நகைப்புக்கிடமான குற்றச்சாட்டுக்களுக்கு பதில் வழங்கும் அளவுக்கு எனக்கு நேரமில்லை. என் மீது குற்றஞ்சாட்டுபவர் பிரதமரிடமும் ஜனாதிபதியிடமும் அமைச்சரிடமும் மாறிமாறி என்னைப் பற்றிப் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார், வருகின்றார், வருவார். அவருக்கு எனது வாழ்த்துக்கள்” – என்றார்.