உட்கட்சி மோதலைச் சமாளிக்க முடியாமல் நாட்டுப் பிரச்சினையைத் எப்படித் தீர்ப்பீர்? கோட்டாவிடம் சஜித் கேள்விக்கணை.
அரச கூட்டுக்குள் உட்கட்சி மோதலைக்கூடச் சமாளிக்க முடியாமல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச திண்டாடுகின்றார் என்று எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
இந்நிலையில், நாடு இன்று பொருளாதார ரீதியில் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை ஜனாதிபதி எப்படித் தீர்க்கப்போகின்றார் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
அரசில் அங்கத்துவம் வகித்துக்கொண்டு கூட்டுப் பொறுப்பை மீறும் வகையில் செயற்பட்டனர் எனக் கூறி விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகிய இருவரும் ஜனாதிபதியால் பதவி நீக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நாட்டின் நிலைமை மிகவும் மோசமடைந்துவிட்டது. இந்த அரசை அரசுக்குள் இருப்பவர்களே வெறுக்கத் தொடங்கியுள்ளனர். அதன் வெளிப்பாடாகவே விமல், கம்மன்பிலவின் அமைச்சுப் பதவிகள் ஜனாதிபதியால் பறிக்கப்பட்டுள்ளன.
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அனுமதியின்றி இருவரும் அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இதுதான் வேடிக்கையாக இருக்கின்றது.
எனவே, அரசுக்குள் ஒட்டிக்கொண்டிருப்பவர்கள் அனைவரும் தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்.
அரசின் நிலை இனி அந்தோகதிதான். மக்கள் அனைவரும் அரசுக்கு எதிரான போராட்டங்களை மென்மேலும் தீவிரப்படுத்த வேண்டும்.
நாட்டை நேசிக்கும் அனைவரும் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஆட்சி விரைவில் மலர ஒத்துழைக்க வேண்டும்” – என்றார்.