வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிராக கோட்டாவின் இல்லத்துக்கு முன்னால் திரண்ட சஜித் அணியின் மகளிர் படை.
அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அணியினர் மிரிஹானவிலும் ஜனாதிபதியின் இல்லத்துக்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஹிருணிகா பிரேமச்சந்திர தலைமையில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை உட்பட பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக் கோரி இவர்கள் மிரிஹானவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மிரிஹான சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பின்னர் ஜனாதிபதியின் இல்லத்தை நோக்கிச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை சமூக ஊடகங்களில் பதிவு செய்துள்ள ஹர்ஷ டி சில்வா, “ஹிருணிகா தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தியின் துணிச்சலான சில பெண்கள் ஜனாதிபதியின் இல்லத்துக்கு வெளியே காணப்படுகின்றனர். அவருக்கான மனுவைக் கையளித்த பின்னர் அவர்கள் தமது ஆர்ப்பாட்டங்களை ஆரம்பித்துள்ளனர். மக்கள் நெருக்கடியில் சிக்கித் துயருகின்றனர் என்பது ஜனாதிபதிக்குத் தெரியுமோ தெரியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.