ரஷியாவில் தனது சேவையை நிறுத்துவதாக விசா, மாஸ்டர்கார்டு அதிரடி முடிவு.
சோவியத் யூனியனின் அங்கமாக திகழ்ந்த உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 10 நாட்கள் ஆகி விட்டன. அபார பலம் கொண்ட ரஷியா, உக்ரைன் நாட்டை உருக்குலைய வைத்து வருகிறது.
இந்த 10 நாட்களில் அந்த நாட்டின் முக்கிய நகரங்கள் அத்தனையையும் ஏவுகணை வீச்சு, வான்தாக்குதல், பீரங்கி தாக்குதல் என நடத்தி உருக்குலைய வைத்து வருகிறது, ரஷியா. அதே நேரத்தில் உக்ரைனும், ஈடுகொடுத்து போராடி வருகிறது.
இந்நிலையில், “வரவிருக்கும் நாட்களில்” பரிவர்த்தனைகள் துண்டிக்கப்படும் என்று விசா நேற்று கூறியதுடன், விசா கார்டுகள் தடை செய்யப்பட்டவுடன் ரஷியாவில் வழங்கப்பட்ட கார்டுகள் வெளிநாட்டில் வேலை செய்யாது என்றும், வெளிநாட்டில் வழங்கப்பட்ட கார்டுகள் ரஷியாவிற்குள் வேலை செய்யாது என்றும் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, விசா தலைமை நிர்வாக அதிகாரி அல் கெல்லி ஒரு அறிக்கையில், “உக்ரைன் மீதான ரஷியாவின் ஆக்கிரமிப்பு மற்றும் தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாத அளவில் இருப்பதைத் தொடர்ந்து நாங்கள் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்” என தெரிவித்தார்.
இதை தொடர்ந்து மாஸ்டர்கார்டு, உக்ரைன் மீதான ரஷியப் போரை “அதிர்ச்சியூட்டும் மற்றும் பேரழிவு தரக்கூடியது” என்று கூறியதுடன். மாஸ்டர்கார்டின் தடை விசாவைப் போலவே இருக்கும் என அறிவித்தது.
இதுகுறித்து மாஸ்டர்கார்டு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “ரஷியாவின் இந்தச் செயலின் மூலம், ரஷிய வங்கிகளால் வழங்கப்படும் கார்டுகள் இனி மாஸ்டர்கார்டு நெட்வொர்க்கால் ஆதரிக்கப்படாது. மேலும், நாட்டிற்கு வெளியே வழங்கப்படும் எந்த மாஸ்டர்கார்டும் ரஷிய வணிகர்கள் அல்லது ஏ.டி.எம்.களில் வேலை செய்யாது ”என்று தெரிவித்துள்ளது.