சாபக்கேடான சட்டம் நாட்டுக்கு வேண்டாம்! – உதயகுமார் எம்.பி. கோரிக்கை.
“இந்த நாட்டுக்குச் சாபக்கேடாக அமைந்துள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.”
இவ்வாறு தொழிலாளர் தேசிய முன்னணியின் பிரதித் தலைவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமார் வலியுறுத்தினார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி நுவரெலியா நகரில் இன்று கையெழுத்து வேட்டை நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தால் வடக்கு, கிழக்கு மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எமது மலையக இளைஞர்களுக்கு எதிராகவும் அந்தச் சட்டம் பயன்படுத்தப்பட்டது.
வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டவர்கள்கூட இன்னும் வழக்குத் தொடுக்கப்படாமல் பல வருடங்களாகியும் சிறைகளில் வாடுகின்றனர்.
வேலை தேடி கொழும்புக்குச் சென்ற மலையக இளைஞர்கள் மற்றும் வடக்கு, கிழக்கு மக்களுடன் நட்பைப் பேணியவர்களுக்கு எதிராகவும் அந்தச் சட்டம் பயன்படுத்தப்பட்டது.
இதனால் பலரின் வாழ்க்கை சூனியமாகியுள்ளது. எனவே, இப்படியான – சாபக்கேடான சட்டம் நாட்டுக்குத் தேவையில்லை.
ஐ.நா. மனித உரிமைகள் சபைகூட இதனையே வலியுறுத்தியுள்ளது. எனவே, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை முற்றாக நீக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” – என்றார்.