ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்க இலங்கைக்கு இந்தியா கடும் நிபந்தனைகள்!
இலங்கை அரசு கோரிய ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்கு இந்தியா கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது என அறியமுடிகின்றது என ஆங்கில ஊடகம் ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியில்,
அந்நியச் செலாவணி மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்தும் நெருக்கடியிலிருந்து நீண்டகால மீட்சியை இலக்காகக்கொண்ட பொருளாதார நடவடிக்கைத் திட்டத்தை சமர்ப்பிக்க இந்தியா கோரியுள்ளது.
மேலும், வடக்கு மற்றும் கிழக்கில் பொருளாதாரத் திட்டங்களைத் தொடங்குவதற்கான முன்னேற்பாட்டு பட்டியலையும் இந்தியா கோரியுள்ளது என அறியமுடிகின்றது.
கடந்த வருடம் டிசம்பரில் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெற்றுக்கொண்ட நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவின் இந்திய விஜயம் இரண்டு முறை இரத்துச் செய்யப்பட்டது.
இதன் காரணமாக உணவு, எரிபொருள், மருந்துப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கான மேலும் ஒரு பில்லியன் டொலர் கடனைப் பெறுவதற்கு இன்னும் திட்டம் வகுக்கப்படவில்லை.
இலங்கை எடுத்த டிசம்பர் மாதக் கடனும் இந்த வாரத்தில் செலுத்தப்பட இருந்த நிலையில், பலாலி விமான நிலையத்தை மீண்டும் திறப்பது, திருகோணமலைத் துறைமுகப் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை இந்தியா முன்வைத்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.