சதத்தை தவறவிட்ட கவாஜா.

பாகிஸ்தான் – ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 476 ரன்களில் டிக்ளர் செய்தது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு உஸ்மான் கவாஜா – டேவிட் வார்னர் இணை அபாரமான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர்.
அதன்பின் 68 ரன்களில் வார்னர் ஆட்டமிழக்க, சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட உஸ்மான் கவாஜா 97 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
அடுத்து களமிறங்கிய மார்னஸ் லபுசாக்னே – ஸ்டீவ் ஸ்மித் இணை அபாரமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் லபுசாக்னே அரைசதம் கடந்து அசத்தினார்.
இதன்மூலம் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 271 ரன்களைச் சேர்த்துள்ளது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் மார்னஸ் லபுசாக்னே 69 ரன்களுடனும், ஸ்டீவ் ஸ்மித் 24 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இதையடுத்து 205 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஆஸ்திரேலிய அணி நாளை 4ஆம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.