மொட்டையடித்து, கைகளைக் கட்டி நடக்கவைத்த கொடூரம்- உத்ரகாண்டில் மருத்துவ மாணவர்களுக்கு நடந்த துயரம்
ஒவ்வொருவருக்கும் கல்லூரி வாழ்க்கை என்பது மறக்க முடியாத நினைவுகளைக் கொண்டதாக இருக்கும். தங்களது வாழ்க்கையை மாற்றியமைத்த இடமாக அமையும். காதல், நட்பு, கொண்டாட்டம் என கல்லூரி வாழ்க்கையின் நினைவுகளிலிருந்து கடைசி வாழ்க்கையின் கடைசி பொழுதுவரை வெளியே வர முடியாது. அதனால், கல்லூரி வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுவருகின்றன.
ஆனால், கல்லூரிகளில் ரேகிங் எனும் கலாச்சாரம் அவலமான ஒன்றாகவே நீடித்துவருகிறது. கல்லூரியில் புதிதாக சேரும் மாணவர்களை சீனியர் மாணவர்கள் நட்புடன் அரவணைக்காமல் அடிமைபோல நடத்துநிகழ்வுகள் என்பது பல கல்லூரிகள் இயல்பான ஒன்றாகவே உள்ளது. ரேகிங் நடைமுறைக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது.
தற்போது, உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள ஹல்த்வானி மருத்துவக் கல்லூரியில், முதலாமாண்டு மாணவர்கள் 27 பேரை மொட்டையடித்து பின்புறமாக கைகளைக் கட்டி வரிசையாக நடக்கவைத்த வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த வீடியோ பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது முதலாண்டு மாணவர்களை சீனியர் மாணவர்கள் செய்த ரேகிங்தான் என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நெட்டீசன்கள் குற்றம்சாட்டினர்.
இதுகுறித்து டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு பேட்டியளித்த அந்தக் கல்லூரியின் முதல்வர் அருண் ஜோஷி, ‘இதுதொடர்பாக இதுவரையில் எந்தப் புகாரும் வரவில்லை. இந்தக் கல்லூரியில் மாணவர்கள் அடிக்கடி தாங்களாகவே மொட்டியடித்துக் கொள்வார்கள். இது எப்போதும் ரேகிங்கோடு தொடர்புடையது கிடையாது. இந்த கல்லூரியில் பல மாணவர்கள் மிலிட்டரி ஹேர்கட்டிங்குடன் சேருவார்கள். இது ஒன்றும் புதிதானது கிடையாது’ என்று தெரிவித்துள்ளார். இருப்பினும், இந்தச் சம்பவம் தொடர்பாக மாணவர்கள் தரப்பில் பேசமறுத்துவிட்டனர்.