பெண்மையைப் போற்றுவோம்… பூவுலகைக் காப்போம் – ராமதாஸ் மகளிர் தின வாழ்த்து
உலக மகளிர் தினம் நாளை (மார்ச் 8) கொண்டாடப்படும் நிலையில், பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மகளிருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், உலகில் ஆக்கும் சக்தியாகவும், காக்கும் சக்தியாகவும் திகழும் மகளிரை பெருமைப்படுத்தும் வகையில் உலக மகளிர் நாள் மார்ச் 8ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில், அனைத்து மகளிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் உளமார்ந்த மகளிர் நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மகளிர் நாள் நூற்றாண்டுகளைக் கடந்த வரலாறு கொண்டதாகும். 1789 ஆம் ஆண்டில் பிரெஞ்சுப் புரட்சியின்போது சமத்துவம், சுதந்திரத்துவம், வாக்குரிமை ஆகிய மூன்றையும் வலியுறுத்தி பாரிஸ் நகரில் பெண்கள் போராடத் தொடங்கியது தான் மகளிர் நாள் கொண்டாடப்படுவதற்கான தொடக்கம் ஆகும். அதன் பின் உலகம் முழுவதும் உள்ள மகளிர் தங்களின் கோரிக்கைக்காக குரல் கொடுத்த நிலையில் 1911 ஆம் ஆண்டில் தான் சர்வதேச மகளிர் நாளை ஐ.நா. அமைப்பு முறைப்படி அறிவித்தது.
ஒரு காலத்தில் உரிமைகளுக்காக போராட வேண்டிய நிலையில் இருந்த பெண்களால் தான், இன்றைய நிலையில் உலகைக் காக்க முடியும் என்று ஐ.நா. அமைப்பு நம்புகிறது. அதனால் தான் நடப்பாண்டின் மகளிர் நாளுக்கான கருப்பொருளாக,‘‘ நீடித்த நாளைக்காக இன்று பாலின சமத்துவம்’’ என்ற தத்துவம் அறிவிக்கப்பட்டுள்ளது. பூவுலகுக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளை கட்டுப்படுத்துவதற்கான இயக்கங்களை உலகில் இன்றைய நிலையில் பெண்களும், சிறுமிகளும் தலைமையேற்று நடத்துகின்றனர்.
அவர்களின் தலைமைப்பண்புக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், நீடித்த எதிர்காலத்திற்கான அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையிலும் இந்த கருப்பொருள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது இன்றைய சூழலுக்கு மிக மிக பொருத்தமான கருப்பொருளாகும்.
உலகை ஆக்கும் சக்தியாகவும், காக்கும் சக்தியாகவும் திகழ்பவர்கள் பெண்கள் என்பது இதன்மூலம் தெளிவாகிறது. பெண்கள் எதிலும், எதற்கும், யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதையே இது காட்டுகிறது. பல்வேறு துறைகளில் ஆண்களை விட பெண்கள் அதிக சாதனைகளைப் படைத்துள்ளனர். அத்தகைய சிறப்புமிக்க பெண்களை குறைந்தபட்சம் ஆணுக்கு சமமாக நடத்த முன்வர வேண்டும்.
பெண்களுக்கு கண்ணியமான, கவுரவமான வாழ்க்கையையும், பொதுவெளியில் அச்சமின்றி, சுதந்திரமாக நடமாடுவதற்குமான உரிமையை வென்றெடுத்துத் தர வேண்டிய ஒட்டுமொத்த சமூகத்தின் கடமை ஆகும். அந்தக் கடமையை நிறைவேற்ற இந்த நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம் இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.