யுக்ரேன் படையெடுப்பு குறித்த சர்வதேச விசாரணையில் பங்கெடுக்க மறுத்த ரஷ்யா!
யுக்ரேன் படையெடுப்பை நிறுத்தக் கோரி சர்வதேச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் கலந்து கொள்ள ரஷ்யா மறுத்து விட்டது.
ஹேக் பகுதியிலுள்ள ரஷ்ய தூதர் அலெக்சாண்டர் ஷுல்கின், அவருடைய அரசாங்கம் இதில் பங்கேற்க விரும்பவில்லை என்று கூறினார்.
ஐ.நா-வின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, ரஷ்ய கூட்டமைப்பு விசாரணையில் பங்கெடுக்காததற்கு வருந்துவதாகக் கூறினார்.
யுக்ரேன் பிரதிநிதி ஆன்டன் கோரினெவிச், “ரஷ்ய இருக்கைகள் காலியாக உள்ளன. அவர்கள் இங்கே இல்லை. போர்க்களத்தில் இருக்கிறார்கள்,” என்று நீதிமன்றத்தில் கூறினார்.
இல்லாத இனப்படுகொலையின் கூற்றுகளைப் பயன்படுத்தி, படையெடுப்பை நியாயப்படுத்த முயல்வதாக அவர் குற்றம் சாட்டியவர், “புதின் பொய் சொல்கிறார். யுக்ரேன் குடிமக்கள் இறந்துகொண்டிருக்கின்றனர்,” என்றார்.
யுக்ரேன், சர்வதேச நீதிமன்றத்தில் அவசரமாகத் தலையிட்டு, ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.