ரஷ்யாவின் கச்சா எண்ணெய்க்குத் தடை விதிக்க முடியாதது ஏன்?
உலகின் மிகவும் முக்கியமான வர்த்தக பொருளாக இருக்கிறது எண்ணெய். அதன் விலை நமது வீட்டு பட்ஜெட்டை மாத்திரமல்ல, உலகத்தில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறதா, இனி ஏற்பட்டிருக்கிறதா என்பதையும் உணர்த்தக்கூடியது.
அவ்வப்போது எண்ணெய் விலை உயரும் போதுதான் என்றல்ல, விலை குறைந்தாலும் அது அசாதாரணமான நிலைக்கான அறிகுறியாகவே கவனிக்கப்படுகிறது. கொரோனா உச்சத்தில் இருந்தபோது அப்படியொரு சூழலை உலகம் எதிர்கொண்டது.
இப்போது கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு சுமார் 140 டாலர்களைத் தொட்டிருக்கிறது. காரணம் யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு. யுக்ரேன் விவகாரம் தொடங்கியதில் இருந்தே எண்ணெய் விலை வேகமாக உயரத் தொடங்கியது. உலக நாடுகள் பலவும் எண்ணெய் விலையின் தாக்கத்தை உணரத் தொடங்கிவிட்டன. அமெரிக்காவும் இதற்கு விதிவிலக்கல்ல.
யுக்ரேன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவுக்கு மேற்கத்திய நாடுகள் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன. ரஷ்யாவின் முக்கிய நபர்கள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. ரஷ்யாவை ஸ்விப்ஃப்ட் எனப்படும் சர்வதேசப் பணப் பரிவர்த்தனை சேவையில் இருந்து நீக்குவதற்கும் ஆதரவு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் இதுவரை எண்ணெய் மற்றும் எரிவாயு விற்பனையில் இருந்து ரஷ்யாவைத் தடுப்பதற்கு அமெரிக்கா ஆலோசனை நடத்தி வருகிறது. ஆனால் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ரஷ்யாவின் படையெடுப்பால் உலகம் முழுவதும் எண்ணெய் விலை உயரக்கூடும், அதனால் உணவுப் பொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களுக்குப் தட்டுப்பாடு ஏற்பாடு ஏற்படும் என்றெல்லாம் கணிக்கப்படுகிறது.
இதற்கு மத்தியில் ரஷ்யாவின் எண்ணெய்க்குத் தடை விதிப்பது என்பது மிகப்பெரிய பொருளாதார நடவடிக்கையாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ரஷ்யாவின் எண்ணெயைத் தடை செய்ய அமெரிக்கா முயன்றாலும், அத்தகைய தடையை ஐரோப்பிய நாடுகளால் தாங்க முடியுமா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.
அமெரிக்கா, சவுதி அரேபியாவுக்குப் பிறகு உலகிலேயே அதிக அளவு எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடு ரஷ்யா. உலகில் சுமார் 10 சதவிகித எண்ணெய் ரஷ்யாவில் இருந்து வருகிறது. இது ஐரோப்பிய நாடுகளின் மூன்றில் ஒரு பங்கு எண்ணெய்த் தேவையை பூர்த்தி செய்கிறது. இதே போல ஐரோப்பா பயன்படுத்தும் சுமார் 40 சதவிகித எரிவாயுவை ரஷ்யா வழங்கி வருகிறது. அதனால் எரிசக்திப் பொருளாதாரத்தில் ரஷ்யாவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் ஒன்றுக்கொன்று பிணைந்து இருக்கின்றன.
இதற்காகவே ரஷ்யாவின் எண்ணெயைத் தடை செய்யவதற்கு ஐரோப்பிய நாடுகள் பலவும் தயங்கி வருகின்றன. எண்ணெய் நிறுவனங்களுக்கும் இந்தத் தயக்கம் இருக்கிறது. ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெயைத் தொடர்ந்து வாங்கப் போவதாக உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களுல் ஒன்றான ஷெல் கூறியுள்ளது. இந்த நிறுவனத்தின் 8 சதவிகித எண்ணெய் ரஷ்யாவில் இருந்து வருகிறது.
உலகின் குறிப்பிட்ட சில நாடுகளில்தான் கச்சா எண்ணெய் கிடைக்கிறது. இவை இணைந்து ஒபெக் எனப்படும் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பில் உருவாக்கின்றன. இதில் 13 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த நாடுகளுடன் ரஷ்யா உள்பட பத்து நாடுகளையும் சேர்த்து ஒபெக் பிளஸ் கூட்டமைப்பு என அழைக்கப்படுகிறது.
மற்றப் பண்டங்களைப் போலவே டிமாண்ட் – சப்ளை எனப்படும் தேவை – விநியோக அடிப்படையிலேயே கச்சா எண்ணெய் விலையும் நிர்ணயிக்கப்படுகிறது. அதாவது, தேவை அதிகரித்தாலோ, உற்பத்தி குறைந்தாலோ கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்கும் என்பதுதான் அடிப்படை. அதனால் எண்ணெய் விலையை நிர்ணயிப்பதில் ஒபெக் கூட்டமைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. இது தவிர புவிசார் அரசியல், ஊக வணிகம் ஆகியவையும் கச்சா எண்ணெய் விலையை நிர்ணயிக்கும் காரணிகளாக இருக்கின்றன.
யுக்ரேன் போரின் காரணமாக உயரும் எண்ணெய் விலையைக் கருத்தில் கொண்டு, எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
ஆனால் குறைந்த அளவிலேயே உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்ற அந்தக் கூட்டமைப்பு அறிவித்திருக்கிறது. இப்போதைய சூழலில் எண்ணெய்ப் பற்றாக்குறை என்று எதுவும் இல்லை என்றும் அந்த அமைப்பு கூறியிருக்கிறது. உற்பத்தியை அதிகரித்தால், தேவையில்லாமல் அதிக எண்ணெய் சந்தைக்கு வந்துவிடும் என்று அந்த அமைப்பு கூறியிருக்கிறது.
இதனால், ஒபெக் நாடுகள் இல்லாத சர்வதேச எரிசக்தி முகமை எனப்படும் எண்ணெய் விலை மற்றும் விநியோகத்தை மேற்பார்வையிடும் அமைப்பு, தங்களுடைய இருப்பில் இருந்து சுமார் 6 கோடி பீப்பாய்களை விடுவிக்க ஒப்புக் கொண்டிருக்கிறது. இதில் சுமார் பாதியளவு அமெரிக்காவில் இருந்து வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆயினும் இது எண்ணெய் விலையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.