மேற்கு நாடுகள் ரஷ்ய அச்சுறுத்தலுக்கு விரைவாகச் செயலாற்றவில்லை: பிரிட்டன் வெளியுறவுத்துறை செயலாளர்.
யுக்ரேன் எல்லையில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் படைகளை குவித்தமைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், மேற்கு நாடுகள் போதுமான அளவுக்கு முன்கூட்டியே தீர்க்கமாகச் செயல்படவில்லை என்று பிரிட்டன் வெளியுறவுத் துறை செயலாளர் லிஸ் ட்ரஸ் கூறுகிறார்.
“உண்மை என்னவென்றால், அதிபர் புதின் எதிர்ப்பு குறித்த அச்சுறுத்தல்களை போதுமான அளவுக்குத் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை,” என்று அவர் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறினார்.
யுக்ரேன் மீதான படையெடுப்பு மூலம் ரஷ்யா “ஐரோப்பாவின் பாதுகாப்புக் கட்டமைப்பைச் சிதைத்துவிட்டது,” என்று அவர் கூறினார்.
மேலும், “நாம் இப்போது நேட்டோவை வலுப்படுத்த வேண்டும். குறிப்பாக கிழக்குப் பகுதியை வலுப்படுத்த வேண்டும்,” என்று திங்கள் கிழமையன்று ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் வெளியுறவுக் குழுவிடம் கூறினார்.
மேலும், “ஏற்கெனவே எஸ்தோனியாவுக்கு அதிக படைகளை அனுப்பியுள்ளோம். ஆனால், இன்னும் செய்ய வேண்டியுள்ளது. நேட்டோ முழுவதுக்குமான பாதுகாப்புச் செலவினங்களில் நாம் தீவிர கவனம் செலுத்தவேண்டும்,” என்றார்.