உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மகனுக்காக ஏங்கும் ஊரடங்கின்போது 1,400 கி.மீ தூரம் சென்று மகனை மீட்ட அம்மா…
பிள்ளைகள் மீது தாய்க்கு இருக்கும் அன்பை நாம் அளவீடு செய்துவிட முடியாது. பிள்ளைகளுக்கு ஒரு ஆபத்து என்றால், அவர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் சரி, அவர்களுக்காக தாயின் உள்ளம் பதபதைத்தபடி காத்திருக்கும். வாய்ப்பு இருந்தால், தாமே களத்தில் இறங்கி பிள்ளைகளை காக்கும் மேலான பொறுப்பை அவர்கள் செய்து முடிப்பார்கள்.
அப்படியொரு சம்பவம், தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத்தில் ஏற்கனவே ஒருமுறை நடந்தது. அப்போதைய துயர சமயத்தில், தனது மகனை மீட்டு அழைத்து வந்த அந்தத் தாயார் இப்போது மீண்டும் கவலையில் ஆழ்ந்துள்ளார். கடந்த முறை உள்நாட்டு அளவில் இருந்த அவரது கவலை, இப்போது வெளிநாட்டில் மையம் கொண்டுள்ளது.
தெலுங்கானா மாநில அரசுப் பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் ராஸியா பேகம். இவருக்கு தற்போது 50 வயது ஆகிறது. கடந்த 2020ஆம் ஆண்டில் கொரோனா காரணமாக தேசிய அளவில் ஊரடங்கு பிறபிக்கப்பட்டது. அப்போது, ஆந்திர மாநிலம், நெல்லூரில் படித்துக் கொண்டிருந்த அவரது மகன் நிஜாமுதீன் அமான், வீடு திரும்ப முடியாமல் சிக்கித் தவித்தார். இதையடுத்து, யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் நேராக ஸ்கூட்டர் எடுத்துக் கொண்டு பயணித்தார் ராஸியா பேகம். சுமார் 1,400 கி.மீ. பயணித்து தனது மகனை அவர் மீட்டு வீட்டிற்கு அழைத்து வந்தார்.
மீண்டும் சிக்கலில் இருக்கும் அன்பு மகன்
தற்போது ராஸியா பேகத்தின் அன்பு மகன், மற்றொரு ஆபத்தில் சிக்கியிருக்கிறார். இதில், சோகம் என்ன என்றால், இந்த முறை, அவரது தாயார் ஸ்கூட்டரில் சென்று அழைத்து வர இயாலது. ஒருவேளை ஸ்கூட்டரில் இறக்கைகள் இருந்தால், நிச்சயமாக பறந்து சென்று, அவர் தனது மகனை மீட்டு கொண்டு வந்திருப்பார். ஆம், பல ஆயிரம் கிலோ மீட்டர்களுக்கு அப்பால், போர் நடந்து கொண்டிருக்கும் உக்ரைன் நாட்டில் மகன் சிக்கியிருப்பதால், மீண்டும் கவலையில் ஆழ்ந்துள்ளார் இந்தத் தாயார். இந்த முறை தன்னால் நேரடியாக உதவி செய்ய முடியவில்லை என்ற கவலையை அவர் பகிர்ந்து கொண்டார்.
எங்கு இருக்கிறார் நிஜாமுதீன்
உக்ரைன் நாட்டில் இருந்து ஒவ்வொரு நாளும் இந்திய மாணவர்களை, இந்திய அரசு மீட்டு கொண்டு வருகிறது. இருப்பினும், போருக்கு மத்தியில் போக்குவரத்து வசதிகள் கிடைக்காமல், மாணவர்கள் பலர் சிக்கியிருக்கின்றனர். உக்ரைன் நாட்டின் சுமி நகரில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வரும் நிஜாமுதீனும் சிக்கியிருக்கிறார். ரஷ்யா படைகள் தொடர்ந்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தி வரும் சூழலில், நிஜாமுதீன் சக மாணவர்களுடன் பதுங்கு குழிகளில் தஞ்சம் அடைந்திருக்கின்றனர்.
தாயார் வேண்டுகோள்..
2 நாட்களுக்கு முன்பாக, தனது தாயாரை தொடர்பு கொண்டு பேசிய நிஜாமுதீன், தான் பத்திரமாக இருப்பதாகவும், தன்னைப் பற்றி கவலை கொள்ள வேண்டாம் என்றும் கூறியுள்ளார். இருப்பினும், போர் சூழ்ந்த பூமியில் மகன் தவித்து வருவது குறித்து அந்தத் தாயார் வேதனை அடைந்துள்ளார். தனது மகனை மீட்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஆகியோருக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.