இலங்கை வருகிறார் இந்தியப் பிரதமர் மோடி.
இலங்கைக்கு, இம்மாத இறுதியில் வருகை தரவிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஸவை சந்திக்க உள்ளார். அப்போது இலங்கைத் தமிழர் பிரச்னை, மீனவர் பிரச்னை உள்ளிட்டவற்றை எழுப்ப திட்டமிட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே நீண்டகாலமாக நல்ல நட்புறவு உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, இலங்கை சீனாவுடன் நெருங்கி பழகி வருகிறது. இந்நிலையில், இலங்கையின் அன்னியச் செலாவணி கையிருப்பு கடுமையாக சரிந்துள்ளது. இதனால், பெட்ரோல், டீசல் இறக்குமதி செய்ய முடியாத அளவுக்கு இங்கு நிதிநெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதிலிருந்து விடுபட, இலங்கை அரசு, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் உதவியை கோரியுள்ளது. இந்த சூழ்நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இம்மாத இறுதியில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார் எனத் தெரிகிறது.
எதிர் வரும், 30ம் திகதி கொழும்பில், ‘பிம்ஸ்டெக்’ எனப்படும் வங்கக் கடல் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம் நடக்கிறது.
இதில் இந்தியப் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். அதைத் தொடர்ந்து, 31ம் திகதி யாழ்ப்பாணம் செல்கிறார்.
அப்போது, வடகிழக்கு மாகாணங்களில் வசிக்கும் தமிழர்களுக்கான மறுவாழ்வு திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய உள்ளார்.
தமிழர்களின் நலன், அதிகரித்து வரும் பயங்கரவாதம், சீனாவுடனான இலங்கையின் நெருக்கம், இந்திய மீனவர்கள் பிரச்னை மற்றும் இலங்கையின் பொருளாதார நிலைமை உள்ளிட்டவை குறித்து மோடி விவாதிப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஏழு ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் மோடி, இலங்கைக்கு மேற்கொள்ளும் இரண்டாவது பயணமாக இது அமைய உள்ளது.தற்போதுள்ள சூழ்நிலையில், இது மிக முக்கியத்துவம் வாய்ந்த பயணமாக அமைய உள்ளது.இதையடுத்து, பயணத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன.
டில்லியில் உள்ள இந்தியாவுக்கான இலங்கை துாதர் மிலிண்ட மொரகொடவுடன், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆலோசனை நடத்த உள்ளார். அதைத் தொடர்ந்து, இலங்கைக்கான இந்தியத் தூதர் கோபால் பாக்லே, தமிழக கவர்னர் ஆர்.என். ரவி மற்றும் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேச உள்ளார்.
அடுத்து, இலங்கை வெளிநாட்டு அமைச்சர் ஜி.எல். பீரிஸ், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் ஆலோசனை நடத்த உள்ளார். இதற்கிடையே, இலங்கை தூதர் மிலிண்ட மொரகொட , ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தலைவர் மோகன் பாகவத்தை சமீபத்தில், மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் சந்தித்துப் பேசினார். அப்போது, கலாசார ரீதியில் இரு நாடுகளுக்கு இடையேயான தொடர்புகள் குறித்து பேசப்பட்டது.
மேலும், கடும் நிதி நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இந்தியாவின் உதவியையும் அவர் கோரியதாக கூறப்படுகிறது. அதனால் இந்தியப் பிரதமர் மோடியின் இந்தப் பயணம், இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவை மீண்டும் புதுப்பித்து கொள்ளவும், வலுப்படுத்தவும் வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.