கோகுல்ராஜ் கொலை வழக்கில் தீர்ப்பு : விசிகவினர் பட்டாசு வெடித்து வரவேற்பு
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ், தன்னுடன் கல்லூரியில் பயின்று வந்த வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்தார். அதைதொடர்ந்து, நாமக்கல்லில் கடந்த 2015ம் ஆண்டு, அவர் தலை துண்டித்து கொல்லப்பட்டு இருந்தார். இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்த போலீசார் யுவராஜ் உள்பட 17 பேரை கைது செய்து செய்தனர்.
வழக்கின் ஆரம்பக்கட்ட விசாரணை நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பின்னர் மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இதனிடையே, குற்றம்சாட்டப்பட்டவர்களில் இருவர் வழக்கு விசாரணைக் காலத்தின் போதே உயிரிழந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்ததை அடுத்து, குற்றம் சாட்டப்பட்டவர்களில் 4 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அதன்படி, A4 சங்கர், A5 அருள் செந்தில், A6 செல்வக்குமார், A7 தங்கதுரை, A15 சுரேஷ் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.
அதேசமயம் யுவராஜ் உட்பட 10 பேரை குற்றவாளிகளாக அறிவித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவர்களுக்கான தண்டனையை மதுரை சிறப்பு நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி, சேலம் ஓமலூர் இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 3 பேருக்கு ஒரு ஆயுள் தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
10 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம்
A1 : யுவராஜ்- சாகும் வரை (3) ஆயுள் தண்டனை, 5 ஆயிரம் அபராதம்; A2 : அருண் (யுவராஜின் கார் ஓட்டுநர்) – சாகும்வரை (3) ஆயுள் தண்டனை; A3 : குமார் (எ) சிவக்குமார்- 2 ஆயுள் தண்டனை; A8 : சதீஸ்குமார்- 2 ஆயுள் தண்டனை; A9 : ரகு (எ) ஸ்ரீதர்- 2 ஆயுள் தண்டனை; A10 ரஞ்சித்- 2 ஆயுள் தண்டனை; A11 : செல்வராஜ்- 2 ஆயுள் தண்டனை; A12 : சந்திர சேகர்- ஆயுள் தண்டனை; A13 பிரபு- 1 ஆயுள் தண்டனை, 5 வருட கடுங்காவல், 5 ஆயிரம் அபராதம்; A14 : கிரிதர்-1 ஆயுள் தண்டனை, 5 வருட கடுங்காவல், 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்நிலையில், ஒசூர் அருகே சேலம் கோகுல்ராஜ் கொலை வழக்கில் வெளியான நீதிமன்ற தீர்ப்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பட்டாசு வெடித்து வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதன்படி, ஆணவக்கொலைக்கு எதிரான தீர்ப்பு எனக்கூறி விசிக-வை சேர்ந்தவர்கள் ஒசூர் அடுத்த சூளகிரி ரவுண்டானாவில் பட்டாசு வெடித்து தீர்ப்பை வரவேற்றனர்.