இம்மாத இறுதியில் சர்வக்கட்சி மாநாடு சு.கவின் கோரிக்கைக்கு கோட்டா இணக்கம் என்கின்றார் மைத்திரி.
“இம்மாத இறுதியில் சர்வக்கட்சி மாநாட்டை நடத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் இணக்கம் வெளியிட்டனர்.”
இவ்வாறு என்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவினருக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச. நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச ஆகியோரும் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.
இதன்போது ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் முன்வைக்கப்பட்ட 15 யோசனைகள் உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,
“நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் உள்ளடங்களாக சர்வக்கட்சி மாநாட்டை நடத்த வேண்டும் என்ற எமது யோசனை ஏற்கப்பட்டது. இதன்படி இம்மாத இறுதியில் குறித்த மாநாடு நடைபெறும். நாட்டை மீட்பதற்கான பொதுவான திட்டங்கள் இதன்போது ஆராயப்படும்.
இதற்கு இணையாக நிபுணர்கள் மாநாடும் நடத்தப்படும். அதில் சர்வமதத் தலைவர்களும் பங்கேற்பார்கள்” – என்றார்.