வங்கியில் பெற்ற ரூ.15 லட்சம் கடனுக்காக மூன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் விற்பனை.. வங்கி நிர்வாகம் மீது விவசாயிகள் புகார்
சேலம் அருகே வங்கியில் பெற்ற ரூ.15 லட்சம் கடனுக்காக மூன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை விற்பனை செய்த வங்கி நிர்வாகம் மீது விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள மன்னாயக்கன்பட்டியை சேர்ந்த விவசாயி அசோக்மேதா. இவருக்கு மூன்று சகோதரர்கள் உள்ளனர். இவர்கள் நான்கு பேருக்கும் திருமணம் ஆகாததால் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர்.
இதனிடையே விவசாயத்தில் போதிய வருமானம் இல்லாததால், இவர்களது அம்மாவின் பெயரில் உள்ள மூன்றரை ஏக்கர் நிலத்தின் பத்திரத்தை வைத்து சேலம் மாவட்டம் அம்மாப்பேட்டையில் உள்ள கனரா வங்கியில் 15 லட்சம் ரூபாய் கடன் பெற்று எலக்ட்ரானிக்ஸ் கடை நடத்தி வந்ததோடு மாதா மாதம் தவணை தொகையை செலுத்தி வந்துள்ளனர்.
இந்த நிலையில் அசோக்மேதாவின் தாய் கேன்சர் நோயால் இறந்து விட்ட நிலையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் கொரோனா ஊரடங்கின் காரணமாக வங்கியில் பெற்ற கடன் தொகைக்கு முறையாக தவணை செலுத்த தவறி விட்டதாக கூறப்படுகிறது,
இதனையடுத்து வங்கி நிர்வாகம் வாங்கிய கடனிற்கு வட்டியும், அசலும் சேர்த்து 50 லட்சம் ரூபாய் கட்ட வேண்டுமென தெரிவித்துள்ளனர்.
இதையறிந்த நிலத்தின் உரிமையாளர்கள் கடந்த ஆண்டு ஜீலை மாதம், வட்டியில் 40 ஆயிரம் ரூபாய் ஒரு தவணை தொகையை செலுத்தி கால அவகாசம் கேட்டு முழு தொகையையும் செலுத்தி விடுவதாக கூறியுள்ளனர்.
இந்த நிலையில் நிலத்தின் உரிமையாளர்களுக்கு முன் அறிவிப்பு ஏதுமின்றி வங்கி நிர்வாகம் ரியல் எஸ்டேட் அதிபருடன் கூட்டு சேர்ந்து விக்னேஸ் லேண்ட் டெவலப்பர் என்பவருக்கு நிலத்தை 82 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விட்டு விட்டதாகவும் நிலத்தை ஒப்படைக்கும் படி அடியாட்களுடன் வீட்டிற்கு சென்று வங்கி நிர்வாகம் மிரட்டி வருவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
ரூ.15 லட்சம் கடனுக்காக மூன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள விளை நிலத்தை அபகரிக்கும் நோக்கில் செயல்படும் வங்கி நிர்வாகம் மீது அதற்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டுத்தரக்கோரி தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு புகார் அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை என வேதனை தெரிவிக்கும் விவசாயிகள், விளை நிலத்தில் பயிர் செய்யமுடியாமல் தவிக்கும் தங்களது உயிரை காப்பாற்றி நிலத்தையும் மீட்டுத்தர வேண்டுமென தமிழக அரசுக்கு பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.