ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு ஜாமீன் – உச்ச நீதிமன்றம் உத்தரவு
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த வந்த நீதிமன்றம் பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்குவதில் உறுதியாக உள்ளோம் என்று தெரிவித்தது. இதற்கு மத்திய அரசு வழக்கறிஞர் சிபிஐ வழக்கை விசாரித்து வருகிறது, பேரறிவாளனுக்கு ஜாமின் தரக்கூடாது என்று வாதிட்டனர்.
மகாத்மா காந்தி கொலை வழக்கில் கோட்சேவின் சகோதரருக்கு 14 ஆண்டு சிறைக்கு பின் விடுதலை செய்யப்பட்டார் என்றும் பேரறிவாளன் விவகாரத்தில் மாநில அமைச்சரவை முடிவை ஆளுநர் தாமதிப்பது ஏன்? என்றும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. பேரறிவாளன் 30 ஆண்டுகள் சிறையில் உள்ளார், கால தாமதம் செய்வதை ஏற்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் பேரறிவாளன் 3 முறை பரோலில் வந்துள்ளார். அப்போது நல்ல முறையில் அவர் நடந்துகொண்டுள்ளார். அனைத்தையும் கருத்தில் கொண்டு பெயில் வழங்க வேண்டும் என்று பேரறிவாளன் வழக்கறிஞர் வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உடல்நிலை மற்றும் 30 ஆண்டு சிறை ஆகியவற்றை கருத்தில் கொண்டு பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளனர். மேலும் ஜோலார்பேட்டை காவல்நிலையத்தில் மாதத்தின் முதல் வாரத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட உத்தரவிடப்பட்டுள்ளது.