1999ல் இந்திய விமானத்தை கடத்திய பாக்., தீவிரவாதி சுட்டுக்கொலை.
1999ம் ஆண்டு காத்மண்டுவில் இருந்து கிளம்பிய இந்திய விமானத்தை கடத்திய தீவிரவாதிகளில், மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஜாகூர் இப்ராஹிம், பாகிஸ்தானில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 1999ம் ஆண்டு டிசம்பர் மாதம், சுமார் 179 பயணிகள் மற்றும் 11 விமான ஊழியர்களுடன் நேபாள தலைநகர் காத்மண்டுவிலிருந்து டில்லி புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் (ஐ.சி-814) விமானத்தை பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத கும்பல் கடத்தியது.
கடத்தப்பட்ட விமானத்தை அப்போது தலிபான்கள் கட்டுப்பாட்டில் இருந்த ஆப்கானிஸ்தானுக்கு தீவிரவாதிகள் கொண்டு சென்றனர்.
மேலும், இந்திய சிறையில் இருந்த ஜெய்ஷ்-இ-முஹம்மது தீவிரவாத இயக்கத் தலைவர் மசூத் அசார் உள்ளிட்ட 3 தீவிரவாதிகளை விடுவித்தால் பயணிகளை திரும்ப ஒப்படைப்பதாக நிபந்தனை விதித்தனர்.
இதனை ஏற்ற இந்திய அரசு, 3 தீவிரவாதிகளை ஒப்படைத்து, பயணிகளையும் விமான ஊழியர்களையும் பத்திரமாக மீட்டது.
இந்த விமான கடத்தல் சம்பவத்தில் முக்கிய மூளையாக செயல்பட்ட ஜாகூர் இப்ராஹிம் தற்போது சிந்து மாகாணத்தில் ‛ஜாகித் அகுந்த்’ என்ற போலியான அடையாளத்துடன் சொந்தமாக பர்னிச்சர் கடை நடத்தி வந்துள்ளார்.
சமீபத்தில் அவனது பர்னிச்சர் கடைக்குள் புகுந்த மர்ம கும்பல் சரமாரியாக சுட்டதில் ஜாகூர் சம்பவ இடத்திலேயே பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொலையாளிகளை தீவிரமாக தேடி வருவதாகவும் கராச்சி நகர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.