மகளிர் உலகக்கோப்பை 2022: இங்கிலாந்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் த்ரில் வெற்றி!
நியூசிலாந்தில் நடைபெற்றுவரும் 12ஆவது மகளிர் உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இங்கிலந்து – வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. அதன்படி விளையாடிய அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 225 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக ஷிமைன் காம்பெல் 66 ரன்களையும், செடன் நேஷன் 49 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் சோஃபி எக்லஸ்டோன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கைத் துரத்திய இங்கிலாந்து அணி தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதில் டாமி பியூமண்ட் மட்டும் ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 46 ரன்களைச் சேர்த்தார்.
மற்ற பேட்டர்களை சரிவர விளையாடாததால் 47.4 ஓவர்களிலேயே இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 218 ரன்களை மட்டுமே சேர்த்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷமிலா கன்னெல் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி த்ரி வெற்றிபெற்றது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிமைன் காம்பெல் ஆட்டநாயகியாகத் தேர்வுசெய்யப்பட்டார்