அரசாங்கத்தின் உத்தேச நகர அபிவிருத்தி திட்டங்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு….
பல முக்கிய நகரங்களில் செயற்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படும் நகர அபிவிருத்தித் திட்டங்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களிடம் இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்துக் கையளிக்கப்பட்டது.
அரசாங்கத்தின் வேலைத் திட்டத்துக்கு அமைய நாட்டின் அபிவிருத்தி இலக்குகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் முக்கிய நகர அபிவிருத்திப் பணிகளை, நகர அபிவிருத்தி அதிகாரசபை, துறைசார் நிறுவனங்களுடன் இணைந்து திட்டமிட்டுள்ளது.
இதன் முதற்கட்டத்தின் கீழ், காலி, பண்டாரவளை, இரத்தினபுரி நகர மத்தி மற்றும் திம்பிரிகஸ்யாய, கோட்டை, புறக்கோட்டை மற்றும் கொள்ளுப்பிட்டி ஆகிய விசேட பொருளாதார வலயங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. பசுமை நகர எண்ணக்கருவுக்கு முன்னுரிமை அளித்து, அனைத்து வசதிகளுடன் கவர்ச்சிகரமானதாக இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
விசாலமான சாலைகள், வாகனத் தரிப்பிட வசதிகள், நடை பாதைகள், வர்த்தக வளாகங்கள் மற்றும் சூரிய சக்தியில் இயங்கும் விளக்கு அமைப்புகள் போன்ற பல வசதிகள் இப்புதிய திட்டத்தில் அடங்குகின்றன.
திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது, குறித்த நகரங்களைச் சூழவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைப் பாதுகாப்பதுடன், பொதுமக்களைக் கவரும் வகையில் பழைய கட்டிடங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா, ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிறினிமல் பெரேரா மற்றும் துறைசார் நிறுவனங்களின் தலைவர்கள், அதிகாரிகள் பலரும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டிருந்தனர்.