ஐரோப்பிய அரசுகள் மலையக மக்கள் தொடர்பில் அக்கறை செலுத்த பிரான்ஸ் ஆவன செய்ய வேண்டும்.
“ஐரோப்பிய ஒன்றிய அரசுகள், மலையக தமிழ் இலங்கை மக்களை கவனத்தில் கொள்ள பிரான்ஸ் வழி காட்ட வேண்டும்.” என்று சொன்னேன். பிரான்சிய தூதுவர் எரிக் லெவர்டு, எனது கோரிக்கையை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார்.
இதுபற்றி ஆவனவற்றை தாம் செய்வதாகவும் உறுதியளித்தார். எதிர்வரும் தினங்களில் தமிழ் முற்போக்கு கூட்டணி தூதுக்குழுவை சந்திக்க விரும்புவதாகவும் பிரான்சிய தூதுவர் தெரிவித்தார். மலையக மக்களின் அரசியல் ஆவணத்தை அனைத்து சர்வதேச சமூக பிரதிநிதிகளுக்கும் கையளித்து, கலந்துரையாட தீர்மானித்துள்ளோம்.
ஆகவே எதிர்வரும் தினமொன்றில் சந்திப்பு நடைபெறும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.
சர்வதேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு, பெருந்தோட்ட பெண்களை மையப்படுத்திய ஒரு நிகழ்வை கொழும்பில் பிரான்சிய தூதரகம் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய மனோ கணேசன் எம்பி மேலும் கூறியுள்ளதாவது,
இங்கே வளவாளர்கள் அழைக்கப்பட்டு, தேயிலை பெருந்தோட்டங்களில் பணி செய்யும் பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் கலந்து உரையாடியமைக்காக பிரான்சிய தூதரகத்துக்கு நன்றி கூறுகின்றேன். இங்கே வளவாளர்களாக உரை நிகழ்த்திய பெ. முத்துலிங்கம், பிரியதர்ஷினி, சோமரத்ன, அனுஷா சோமசுந்தரம் ஆகியோர் மலையகத்தில் பெருந்தோட்ட மக்கள் படும்பாட்டை மிக சிறப்பாக விவரித்தனர்.
அவற்றை கேட்டுக்கொண்டிருந்த போது, குறிப்பாக கலைப்போராளியாக அனுஷா நிகழ்த்திய உரையை செவிமடுத்த போது, எனக்கு வேதனையும், ஆத்திரமும், விரக்தியும் ஒருங்கே ஏற்பட்டது. ஆனால், என் மனதில் வைராக்கியமும் மென்மேலும் உறுதியானது. தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவராக நான் என் கடமையை முழு நாட்டுக்கும் செய்வேன். மிகவும் பின்தங்கிய பெருந்தோட்ட மக்களுக்காக அதிகம் செய்வேன்.
முதற்கட்டமாக மலையக தமிழர்களின் அரசியல் சமூக அபிலாஷைகளை நாம் சர்வதேச மயப்படுத்த நாம் தீர்மானித்துள்ளோம். இந்திய வம்சாவளி மலையக தமிழர் அபிலாஷைகளை தேசிய, சர்வதேசிய அரங்குகளில் முறைப்படி முன்வைக்க நாம் திடசங்கட்பம் பூண்டுள்ளோம். அது படிப்படியாக நடக்கும். இதில் நான் பிரதான பாத்திரம் வகிக்கிறேன். எதிர்வரும் வாரங்களில் நாம் இது தொடர்பில் காத்திரமாக நடவடிக்கை எடுப்பதை நாடு பார்க்கும்.
இந்நாட்டில் வாழும் ஏனைய மக்களை பற்றி அறிந்துள்ள சர்வதேச சமூகம் இனி மலையக தமிழ் மக்கள் பற்றி அறிய வேண்டும். மலையக தமிழர் இல்லாமல் இலங்கை பற்றிய தகவல் முழுமை அடையாது. மலையக மக்கள் படும்பாட்டை இன்று நீங்கள் அறிய விரும்புவது நன்கு தெரிகிறது. இது ஒரு புது நகர்சு. இதை நன் அர்த்தமுள்ளதாக மாற்றுவேன்.
ஐரோப்பிய ஒன்றிய அரசுகள், மலையக தமிழ் மக்களை கவனத்தில் கொள்ள பிரான்ஸ் வழி காட்ட வேண்டும். தூதுவர் எரிக் லெவர்டின் இதுபற்றிய ஆர்வம் என்னை உற்சாகத்துக்கு உள்ளாகியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய அரசுகள், மலையக தமிழ் மக்களை கவனத்தில் கொள்ள பிரான்ஸ் வழி காட்ட வேண்டும் என உங்களை கேட்டுக்கொள்கிறேன்.