பேராவூரணியில் பைக் திருடி புதுக்கோட்டையில் செயின் பறிப்பு – இருவர் கைது

பேராவூரணியில் விலை உயர்ந்த பைக்கை திருடி புதுக்கோட்டையில் பல்வேறு இடங்களில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலத்தில் புதுக்கோட்டை நகர பகுதிக்குட்பட்ட லட்சுமிகுமரப்பா நகரிலும் திருமயம் பகுதியிலும் செயின் பறிப்பு சம்பவம் அரங்கேறியது. இந்நிலையில் புதுக்கோட்டையில் பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை பிடிக்க வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை அருகே பொற்பனைக்கோட்டை பகுதியில் கணேஷ் நகர் காவல்ஆய்வாளர் முகமது ஜாபர் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை நிறுத்தி விசாரணை செய்யும் பொழுது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளனர். மேலும் வாகனத்தை சோதனை செய்யும் பொழுது அதில் தங்க செயின் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சந்தேகத்தின் பேரில் அந்த இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் பேராவூரணியில் விலை உயர்ந்த பைக்கை திருடி அந்த பைக்கை பயன்படுத்தி புதுக்கோட்டை லட்சுமி குமரப்பா நகர், திருமயம் உள்ளிட்ட இடங்களில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.
போலீஸாரிடம் பிடிப்பட்ட இருவரும் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள திருநாளூர் கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம், மறமடக்கி பகுதியைச் சேர்ந்த சந்துரு என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 9 சவரன் நகையையும் பேராவூரணியில் இருந்து திருடப்பட்ட பைக்கையும் பறிமுதல் செய்து அந்த இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.