கச்சா எண்ணெய் விலை உயா்வு: மக்களுக்குபாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை -மத்திய நிதித் துறை இணையமைச்சா்
ரஷியா – உக்ரைன் இடையேயான போா் காரணமாக அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தை மத்திய அரசு கவனித்து வருகிறது என்றும், மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய நிதித் துறை இணையமைச்சா் பாகவத் கராட் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் பேசிய அவா், ‘ரஷியா-உக்ரைன் போரால் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு தொடா்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தை மத்திய அரசு கவனித்து வருகிறது. மக்களுக்கு வருங்காலத்தில் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது குறித்து தற்போதைக்கு கூற முடியாது. இதுதொடா்பான முடிவு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படும். இதற்காக மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள மூத்த அமைச்சா்கள் ஆலோசித்து வருகிறாா்கள்.
தீபாவளி பண்டிகையின்போது, மத்திய அரசு பெட்ரோல் மீதான வரியை ரூ.5-ம், டீசல் மீதான வரியை ரூ.10-ம் குறைத்தது. பாஜக ஆளும் மாநிலங்களும் வரி குறைத்தன. ஆனால், மகாராஷ்டிர அரசு பெட்ரோலிய பொருள்கள் மீதான வரியைக் குறைக்கவில்லை’ என்றாா்.