மட்டக்களப்பு பிராந்தியத்திற்கான புதிதாக உளநல மையம் திறந்துவைப்பு!
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் உளநல மையம் 11.03.2022 திகதி வெள்ளிக்கிழமை கல்லடியில் திறந்துவைக்கப்பட்டது.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி குணசிங்கம் சுகுணன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக சுகாதார அமைச்சின் உளநல துறைக்குப் பெறுப்பான பணிப்பாளர் வைத்தியகலாநிதி ரொகான் ரத்நாயக்க கலந்துகொண்டிருந்ததுடன், இந்நிகழ்விற்கு சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் உளநலப்பிரிவின் வைத்திய நிபுணர்களான ரீ.கடம்பநாதன், ஆர். கமல்ராஜ் அகியோர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.
அதிதிகள் வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து உளநல மையம் அதிதிகளினால் நாடா வெட்டி திறந்துவைக்கப்பட்டது.
மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய நிகழ்வின் போது மாவட்டத்தில் உளநலப்பிரிவானது தனித்து இயங்க வேண்டியதன் அவசியம் மற்றும் உளநலப்பிரிவினால் மேற்கொள்ளப்பட்டுவரும் சேவைகள் தொடர்பாகவும் இதன்போது விளக்க உரைகள் இடம்பெற்றன.
அதனைத் தொடர்ந்து பிரதம அதிதி உரை இடம்பெற்றதுடன், அதிதிகள் புதிய உளநல பிரிவின் கட்டிடத்தினை பார்வையிட்டிருந்தனர்.
மாவட்டத்தின் உளநலம் தொடர்பான அனைத்து விடயங்களின் தேவையின் நிமிர்த்தம் அதனை மேம்படுத்துவதற்காகவே குறித்த தனித்துவமான புதிய உளநலம் மையத்தினை திறந்ததாகவும், அத்தோடு எதிர்காலத்தில் எமது மாவட்டம் சார்ந்த பாடசாலைகளிலும், சமூக மட்டத்திலும் உளநல விடயங்களை அதிகரிக்கும் நோக்கிலும், இந்த மாவட்டத்தில் காணப்படுகின்ற தற்கொலைகளின் எண்ணிக்கை, குற்றச்செயல்களின் எண்ணிக்கை, போதைப்பொருளிற்கு அடிமையாகுதல் மற்றும் இளவயது கற்பங்கள் அனைத்திற்கும் இந்த உளநல துறையின் ஊடாக தீர்வை பெற்றுக்கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையில் மாவட்ட ரீதியாக எதிர்வரும் ஐந்து வருடங்களில் சிறந்த மாற்றத்தை கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கையில் இந்த துறையை மேம்படுத்திச் செல்வதாக இந்நிகழ்விற்கு தலைமைதாங்கிய மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி குணசிங்கம் சுகுணன் தனது உரையின்போது தெரிவித்திருந்தார்.