“தப்பு கணக்கு போட்டுட்டீங்க”.. புது குண்டை தூக்கிப்போட்ட புதின்.. பரபரப்பில் உலக நாடுகள்..!

ரஷ்யா மீது உலக நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகளால் உலகளாவிய ஆற்றல், உணவு பொருட்களுக்கான நெருக்கடி வரலாம் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரித்து இருக்கிறார்.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி போர் தொடுப்பதாக அறிவித்தது. இந்த முடிவினை அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. மேலும், ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளையும் இந்த நாடுகள் விதித்துள்ளன. இதன் காரணமாக ரஷ்யாவின் நாணயமான ரூபிளின் மதிப்பு மோசமான சரிவை சந்தித்து வருகிறது. அதுமட்டும் அல்லாமல் ரஷ்யாவில் உணவு, மருந்து பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்த மோசமான சூழ்நிலையில் இருந்து ரஷ்யா மீண்டு வரும் என்றும், உலக நாடுகள் மோசமான வர்த்தக இழப்பை சந்திக்க இருப்பதாகவும் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உக்ரைன் – ரஷ்யா விவகாரத்தில் தலையிடும் நாடுகள் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என புதின் முன்னரே எச்சரித்து இருந்தார். இருப்பினும், மேற்குலக நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்தன. மேலும், தங்களது நாடுகளில் உள்ள ரஷ்ய வங்கிகளை முடக்கியும் ரஷ்ய தொழிலதிபர்களின் சொத்துக்களை முடக்கம் செய்தும் வருகின்றன. இது சர்வதேச சந்தையை பெரும் அளவில் பாதித்துள்ளது.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த புதின்,” உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்து வருகின்றன, ஆனால் அது எங்கள் தவறு அல்ல. இது அவர்களின் தவறான கணக்கின் விளைவு. எங்களை குறை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்றார்.

உக்ரைன் வழியாக ரஷ்யா ஆயில் மற்றும் கேஸ்-ஐ தொடர்ந்து ஏற்றுமதி செய்துவருவதாகவும் மேற்கத்திய நாடுகளின் எதிர்ப்பு நாடுகளான வெனிசுலா மற்றும் ஈரானிடம் இருந்து எரிபொருளை பெறுவதற்கு அமெரிக்கா முயற்சி செய்வதாகவும் புதின் குற்றம் சாட்டியுள்ளார்.

உலகளவில் ரஷ்யா அதிக உர உற்பத்தியை மேற்கொண்டு வருகிறது என்றும், தற்போது விதிக்கப்பட்டுள்ள இந்த பொருளாதார தடைகள் காரணமாக உலகளாவிய உணவுப் பொருள் நெருக்கடி வரலாம் எனவும் புதின் எச்சரித்து இருக்கிறார்.

“மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு நெருக்கடியை இந்த சூழ்நிலை உருவாக்கியுள்ளது என்பதை அறிகிறோம். ஆனால், அவற்றுக்கான தீர்வுகளை படிப்படியாக அடைவோம். ரஷ்யர்களால் முடியாதது எதுவும் இல்லை” என புதின் தெரிவித்தார்.

உலக நாடுகள், ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துவரும் வேளையில் புதின் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருப்பது உலகளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.