“உக்ரைன் போர்” தலைநகர் கீவ் நோக்கி முன்னேறும் ரஷிய படைகள்!
உக்ரைன் மீது ரஷியா இன்று 17-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன. அதேவேளை, தென்கிழக்கு நகரமான மரியுபோல் நகரிலும் ரஷியா வான்வெளி தாக்குதல் நடத்தி வருகிறது.
ரஷியா நடத்தி வரும் தாக்குதலுக்கு உக்ரைன் தரப்பும் பதிலடி கொடுத்து வருகிறது. ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் ஆயுதம் மற்றும் நிதி உதவிகளை வழங்கி வருகிறது. ரஷியா – உக்ரைன் இடையே நடத்து வரும் போரில் இரு தரப்பிலும் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், தலைநகர் கீவ், ஒடெசா, டினிப்ரோ மற்றும் கார்கிவ் உள்ளிட்ட பல நகரங்களில் சனிக்கிழமை வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து உக்ரைன் அதிகாரிகள் கூறுகையில், “ரஷியப் படைகள் உக்ரைனின் தலைநகரான கீவை நோக்கி முன்னேறி வருவகின்றன. மேலும் மற்ற உக்ரைன் நகரங்களில் பொதுமக்கள் பகுதிகளை தாக்குகின்றன. தெற்கு துறைமுக நகரான மரியுபோல் முற்றுகையிடப்பட்டுள்ளது. அங்கு 1,500 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்”. என்று தெரிவித்தனர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அணு ஆயுதம் கொண்ட ரஷியாவிற்கு எதிரான நேரடி மோதலை மேற்கொண்டால், அது “மூன்றாம் உலகப் போருக்கு” வழிவகுக்கும் என்று எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.