உயிரியல் ஆயுதங்கள் தயாரிப்பதாக ரஷ்யா பொய்க் குற்றச்சாட்டுகளை சுமத்துகிறது: அமெரிக்கா
அமெரிக்காவும் உக்ரேனும் தாங்கள் உயிரியல் ஆயுதங்களைத் தயாரிப்பதாய் ரஷ்யா முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை வன்மையாக மறுத்துள்ளன.
உக்ரேனில் அத்தகைய ஆயுதங்களைத் தயாரிப்பதற்கு அமெரிக்கா நிதியுதவி செய்து வருவதாய் ரஷ்யா குற்றஞ்சாட்டியது.
ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றம் அது குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் மாஸ்கோ கேட்டுக்கொண்டது.
உக்ரேனில் உயிரியல் ஆய்வுகளை மேற்கொள்ளும் குறைந்தது 30 கூடங்கள் இருப்பதாய் ஐக்கிய நாட்டு நிறுவனத்துக்கான ரஷ்யத் தூதர் கூறினார்.
அங்கு ஆபத்தான ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன;
குறிப்பாக, செயற்கை உயிரியலைப் பயன்படுத்தி காலரா, anthrax போன்ற நோய்களை உருவாக்க ஆய்வுகள் நடைபெற்று வருவதற்கான ஆதாரம் தங்களிடம் இருப்பதாக அவர் சொன்னார்.
அதற்கான நிதியை அமெரிக்கா வழங்குவதாகவும், அதன் மேற்பார்வையின்கீழ் ஆய்வுகள் நடத்தப்படுவதாகவும் ரஷ்யத் தூதர் தெரிவித்தார்.
ரஷ்யா முன்வைத்துள்ள அக்கறைகள் குறித்து முறையான விசாரணை தேவை எனச் சீனத் தூதர் தெரிவித்தார்.
அமெரிக்கத் தூதர் ரஷ்யாவின் குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாய் மறுத்தார்.
ரஷ்யா குறிப்பிடும் உயிரியல் ஆயுதங்களைத் தயாரிக்கும் கூடங்கள் உக்ரேனில் இல்லை;
அமெரிக்க நிதியுதவியில் அங்கு இயங்கி வரும் கூடங்கள், கோவிட்-19 நோய்த்தொற்று போன்ற பொதுச் சுகாதார ஆய்வுப் பணிகளை மேற்கொள்கின்றன என்றார் அவர்.
இத்தகைய பொய்க் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதன் மூலம் உக்ரேன் மீது ரசாயனத் தாக்குதலை நடத்த ரஷ்யா முற்படலாம் என்று அமெரிக்கத் தூதர் எச்சரித்தார்.
-AFP