மேற்கத்திய நாடுகளின் தடைகளால் அனைத்துலக விண்வெளி நிலையம் சீர்குலையும் : ரஷ்யா எச்சரிக்கை
ரஷ்யாவுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடைகளால் அனைத்துலக விண்வெளி நிலையம் சீர்குலையும் என்று ரஷ்ய விண்வெளி அமைப்பின் தலைவர் டிமிட்ரி ரோகோஸின் (Dmitry Rogozin) எச்சரித்துள்ளார்.
ரஷ்யாவைத் தண்டிக்கும் விதத்தில் விதிக்கப்பட்டுள்ள தடைகள் உடனடியாக நீக்கப்படவேண்டும் என்று அவர் கோரினார்.
ரஷ்யா உக்ரேன் மீது படையெடுத்ததைக் கண்டிக்கும் விதத்தில் மேற்கத்திய நாடுகள் அதன் மீது பல தடைகளை விதித்துள்ளன.
சில தடைகளால், அனைத்துலக விண்வெளி நிலையத்துக்குச் சேவையாற்றும் ரஷ்ய வின்கலன்களின் செயல்பாடுகள் தடைபட்டுள்ளதாக அவர் சொன்னார்.
இதனால், விண்வெளி நிலையத்தில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பிரிவு பாதிக்கப்படலாம்; 500 டன் எடை கொண்ட கட்டமைப்பு பூமியிலோ, கடலிலோ விழுந்து சீர்குலையலாம் என்றார் திரு. ரோகோஸின்.
அமெரிக்க விண்வெளி அமைப்பான NASA, அனைத்துலக விண்வெளி நிலையத்தை ரஷ்யாவின் உதவியின்றி சுற்றுப்பாதையில் வைத்துக்கொள்ள, வழிகளை ஆராய்ந்துவருவதாக இந்த மாதத் தொடக்கத்தில் கூறியிருந்தது.
ரஷ்யப் பிரிவுக்கான விண்வெளி வீரர்களையும் பொருள்களையும் Soyuz விண்கலம் கொண்டு செல்கிறது.
அதைப் பாய்ச்சுவதற்கான உபகரணங்களுக்கு அமெரிக்கா சென்ற ஆண்டு முதல் தடை விதித்துள்ளது. இந்த ஆண்டு முதல் அவை ஐரோப்பிய ஒன்றிய, கனடியத் தடைகளின் கீழ் வருகின்றன.
அவை சட்டத்துக்குப் புறம்பானவை என்று கூறி, அவற்றை நீக்கும்படி கோரிக்கை விடுத்திருப்பதாக ரஷ்யா கூறியது.
ரஷ்யாவும், அமெரிக்காவும் தொடர்ந்து ஒத்துழைக்கும் கடைசி சில தளங்களில் ஒன்றாக விண்வெளி விளங்குகிறது.
அமெரிக்க உந்துகணைகளுக்கான இயந்திரங்களின் விநியோகத்தை நிறுத்தப்போவதாகவும் திரு Rogozin அறிவித்தார்.
“அமெரிக்கா இனி துடைப்பக்கட்டையைக் கொண்டு தான் விண்வெளிக்குச் செல்ல வேண்டும்.” என்று அவர் தமது Twitter பக்கத்தில் கூறியிருந்தார்.
-AFP