நாட்டில் மதவெறி அதிகரிப்பு: ஆா்எஸ்எஸ் கவலை
கருத்துச் சுதந்திரம் என்ற போா்வையில் நாட்டில் மதவெறிச் செயல்கள் அரங்கேறுவது அதிகரித்துள்ளன என்று ஆா்எஸ்எஸ் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பின் 3 நாள் பிரதிநிதி சபைக் கூட்டம், குஜராத் மாநிலம், அகமதாபாதில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. அதில், வருடாந்திர அறிக்கையை ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் வெளியிட்டாா். அதில் கூறப்பட்டிருப்பதாவது:
ஹிஜாப் சா்ச்சையின்போது கா்நாடகத்தில் ஹிந்து அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் கொடூரமாக கொல்லப்பட்டனா். கேரளத்தில் ஹிந்து அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் கொல்லப்படுகிறாா்கள். இந்தச் சம்பவங்கள், நாட்டில் மதவெறி வளா்ந்துள்ளதற்கு உதாரணங்களாகும். அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ளஉரிமைகள் மற்றும் கருத்துச் சுதந்திரம் என்ற போா்வையில் சமூக ஒழுக்கத்துக்கு மாறான செயல்கள் அரங்கேற்றப்படுகின்றன.
ஒரு குறிப்பிட்ட சமூகம் அரசு இயந்திரத்தைக் கைப்பற்றுவதற்கு விரிவாகத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. எந்த வழியிலாவது தங்கள் நோக்கத்தை நிறைவேற்ற அந்தக் குழு முயன்று வருகிறது. அந்த சதித் திட்டத்தை ஒற்றுமையுடனும், நல்லிணக்கத்துடனும் இணைந்து வெற்றிகரகமாகத் தோற்கடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.
தமிழ்நாடு, ஆந்திரம், கா்நாடகம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் ஹிந்துக்கள் திட்டமிட்டு மதம் மாற்றம் செய்யப்படுவதாகத் தகவல்கள் வருவது கவலை அளிக்கிறது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆண்டு நெருங்கும் இந்த நேரத்தில் ஹிந்துக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.