பேரீச்சம்பழம் இறக்குமதிக்கான தடை நீக்கம்….

பேரீச்சம்பழம் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்கு அரசு தீர்மானித்துள்ளது. அடுத்த மாதம் முஸ்லிம்களின் ரமழான் நோன்பு ஆரம்பிக்கப்படுவதால் பேரீச்சம்பழம் இறக்குமதிக்கான தடையால் அவர்கள் எதிர்கொள்ளும் பாதிப்பு குறித்து முஸ்லிம் எம்.பிக்கள் நேற்று பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல் தெரிவித்தார்.
பேரீச்சம்பழம் உட்பட 367 பொருட்களை இறக்குமதி செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளதோடு இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அண்மையில் வெளியானது.
இந் நிலையில் பேரீச்சம் பழம் தடையினால் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் குறித்து நேற்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்து, அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக பணிப்புரை வழங்கியுள்ளார். இதன்படி விரைவில் புதிய வர்த்தமானி வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.